பிடரிக்கோடன்

பிடரிக்கோடன் (Tuatara) என்பது நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லிகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் நீள்மூக்குத்தலையி எனும் வரிசையில் வரும் விலங்கு ஆகும். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த நீள்மூக்குத்தலையி வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (Squamata) மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர். பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.


உடலமைப்பு


பிடரிக்கோடன்கள் மரப்பழுப்பு நிறத்தோற்றம் கொண்டவை. தலை முதல் வாலின் நுனி மட்டிலும் 80 செ.மீ. நீளம் வரை இருக்கின்றன. இவற்றின் உயர்ந்த அளவு எடை 1.3 கிலோ ஆகும். இவ்விலங்குகளின் புறமுதுகுப் பகுதியில் மலைகளில் உள்ள கொடுமுடிகளைப் (கோடு) போன்ற உச்சி இருக்கும். குறிப்பாக ஆண் விலங்குகளில் இது மிகுந்து இருக்கும். இதன் காரணமாகவே இவற்றை நியூசிலாந்துப் பழங்குடியினரின் மொழியான மௌரியில் “முதுகில் கொடுமுடிகள்” எனும் பொருளில் ‘டுவாட்டரா’ என்று அழைக்கின்றனர். இவ்விலங்குகளுக்கான ஆங்கிலப் பெயராகவும் ‘டுவாட்டரா’ என்பது நிலைபெற்றுள்ளது. இவற்றின் மேல்தாடையில் உள்ள இருவரிசைப்பற்கள் கீழ்த்தாடையில் உள்ள ஒருவரிசைப்பற்களின் மீது அண்டி இருக்கும் பல் அமைப்பு வேறு எந்த விலங்கிலும் காணப்படாத ஒன்று. மேலும் இவற்றின் நெற்றிப்பகுதியில் இருக்கும் “மூன்றாவது கண்” என்று கருதப்படும் உறுப்பும் மிகவும் விந்தையானதாகும். இதன் பயன் என்னவென்று அறிவதற்கு இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. பகல் இரவு மாற்றத்திற்கேற்ப உடல் இயக்கங்களை அமைத்துக் கொள்ளும் நாடொறு இசைவுக்கும் (circadian rhythm), வெப்பநிலைச் சுழற்சிக்கேற்ப நடத்தையை அமைத்துக் கொள்ளவும் உதவும் உறுப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்விலங்குகளுக்குப் புறக்காதுகள் இல்லாவிட்டாலும் இவற்றின் எலும்புக்கூட்டில் உள்ள விந்தையான அமைப்பினால் இவற்றுக்குக் கேட்கும் திறன் உண்டு. படிவளர்ச்சியில் மீன்களின் வரிசையில் இருக்கும் சில பண்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வாழும் படிவங்கள் எனச் சிலர் அழைத்த போதிலும், உண்மையில் இடையூழிக் காலத்தில் இருந்து இவற்றின் மரபணுக்கள் மாறி வந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.


சூழியல்


இவை அழியும் தருவாயில் உள்ள விலங்குகள். 1989-ம் ஆண்டு வரை இவற்றின் இரண்டாவது சிற்றினம் கண்டுபிடிக்கப்படவில்லை. வாழிட மாற்றம், நியூசிலாந்துத்தீவுகளுக்கு வெளியிலிருந்து மனிதர்கள் மூலமாக உள்நுழைந்த பாலினீசிய எலி போன்ற கோண்மாக்கள், போட்டி உயிரினங்கள் ஆகியவற்றின் விளைவாக, நியூசிலாந்தின் பிற அகணிய உயிரினங்களைப் போலவே பிடரிக்கோடன் இனங்களும் அழிவாய்ப்பைக் கொண்டுள்ளன. ஒரு கட்டத்தில், நியூசிலாந்தின் முதன்மைத் தீவில் இவை முழுவதுமாக அற்றுப்போய், துணைத்தீவுகளில் மட்டுமே எஞ்சியிருந்தன. வேலியிட்டுக் கண்காணிக்கப்படும் கரோரி கானுயிர் காப்பகத்தில் 2005-ஆம் ஆண்டு இவற்றை அறிமுகப்படுத்தியதில் இருந்து நியூசிலாந்தின் முதன்மைத் தீவிலும் இவை வாழ்ந்து வருகின்றன. 2008-ல் இக்காப்பகத்தில் சில பேணுகைப் பணிகளை மேற்கொள்ளும்போது ஒரு பிடரிக்கோடன் முட்டைக்கூட்டைக் கண்டனர். சில நாட்களுக்குப்பின் பார்ப்பு (ஊர்வனக்குஞ்சு) ஒன்றையும் கண்டனர். கடந்த 200 ஆண்டுகளில் நியூசிலாந்து முதன்மைத்தீவில் பிடரிக்கோடன் இயல்பில் வெற்றியுடன் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தது இதுவே முதல் முறையாகும்.


வெளி இணைப்புகள்

பிடரிக்கோடன் – விக்கிப்பீடியா

Tuatara – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *