மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்காகும். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்தது. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ கிராம் (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.
இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.
உயிரியியல்
உணவு
மான்கள் இலை தழைகளையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வயிறு சிறிதாகவும் மற்ற அசைபோடும் விலங்குகளைப் போல சிறப்பமைப்புகளைப் பெறாமலும் உள்ளது. மேலும் இவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே மாடு செம்மறி ஆடு போன்ற விலங்குகள் உண்பதைப்போல சத்துக்குறைவான நார்ச் சத்து நிறைந்த உணவை இவை தின்பதில்லை. சத்து நிறைந்த துளிர்கள், புற்கள், பழங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றின் கொம்பு வளர்ச்சிக்கு கால்சியமும் பாசுப்பேட்டும் மிகவும் தேவையாக இருக்கிறது
இனப்பெருக்கம்
மான்களில் குட்டிகளைத் தாய் மானே வளர்க்கிறது. மானின் சினைக்காலம் பத்து மாதங்கள். மான்கள் ஆகத்து முதல் திசம்பர் வரையில் இணை சேர்கின்றன. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். அரிதாக மூன்று குட்டிகளும் ஈனுவது உண்டு. மான் குட்டி பிறந்த 20 நிமிடங்களிலேயே நிற்க முடிகிறது. மேலும் ஒரு வாரம் குட்டிகள் புற்களுக்குள் மறைந்து வாழும். பின்னர் தாயுடன் நடக்கத் தொடங்கும். குட்டிகள் தாயுடன் ஓராண்டு வரை வாழும். ஆண் குட்டிகள் அதன் பின் தன் தாயை மீண்டும் சந்திப்பதில்லை. ஆனால் பெண் குட்டிகள் வளர்ந்து தங்கள் குட்டிகளுடன் வந்து கூட்டமாக வாழக்கூடும்.
தோற்றக்குறிப்பு
கொம்புகள்
நீர் மானைத் தவிர மற்ற மானினங்கள் அனைத்திலும் ஆண் மான்களுக்குக் கொம்புகள் உண்டு. பெண் மான்களுக்குப் பொதுவாக கொம்புகள் இல்லை எனினும் சில இனங்களில் சிறிய கொம்புகள் உள்ளன.
கலையின் (கலை = ஆண்மான்) கொம்பு அதன் சமூக மதிப்பு நிலையைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக பெரிய கொம்புகளை உடைய மான்கள் அதன் கூட்டத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் அதன் கொம்புகள் விழுவதும் தள்ளப்போகிறது. கொம்புகள் மானின் மரபணுத் தரத்தையும் காட்டுகின்றன. பெரிய கொம்புகளை உடைய கலைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் தன் இனத்தைப் பெருக்கும் திறனும் மிகுதியாக இருக்கும்.
உள்ளினங்கள்
Reeves’s muntjac
சிண்டு மான்
இளம்பழுப்பு மான் (Fallow Deer)
பெர்சிய இளம்பழுப்பு மான் (Persian fallow deer)
சாவக உரூசா மான் (Javan rusa)
கடமான்
சிவப்பு மான்
Thorold’s deer
சிக்கா மான்
தாமின் மான்
Père David’s deer
சதுப்புநில மான்
Indian hog deer
புள்ளிமான்
துருவ மான்
American red brocket
வர்ச்சீனிய தூவால் மான்
கோவேறு கழுதை மான்
Marsh deer
Gray brocket
Southern pudu
Taruca
ரோ மான்
நீர் மான்
ஐரோவாசியக் காட்டுமான்