ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்ப் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒநாய்கள் இல்லை.
ஓநாய்களில் இரண்டே வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது சாம்பல்நிற ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.
உடலமைப்பு
முழுதும் வளர்ந்த ஓநாய்கள் 35 முதல் 55 கிகி எடை இருக்கும். மூக்கில் இருந்து வால் நுனி வரை ஏறத்தாழ 1.5-2 மீ நீளம் இருக்கும். 75 செ.மீ உயரம் இருக்கும். பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும்.