பொனொபோ மனிதக் குரங்கு

பொனொபோ எனப்படும் மனிதக் குரங்குகள் அண்மைக் காலம் வரை குள்ள சிம்ப்பன்சி அல்லது குள்ள சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்டன. இவை முதனி வரிசையில், சிம்ப்பன்சி இனக் குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றின்கீழ் வருவன. “சிம்ப்பன்சி” என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்சி (Common Chimpanzee), மற்றும் பொனொபோ இரண்டையும் குறித்தாலும் வழக்கமாக பொதுவான சிம்ப்பன்சியையே குறிக்கும். பொனொபோக்கள் தற்போது அழிவுநிலையில் உள்ளன. அவை இயற்கையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டில் உள்ள காடுகளில் மட்டும் காணப்படுகின்றன். இவை மனிதர்களின் மரபணுவுடன் 98.5 விழுக்காடு ஒத்துப் போகின்றன. இந்தக் குரங்குகளிடம் மனிதனின் நிறைய குணங்கள் உள்ளன. மனிதனைப் போலப் பேச, கருவிகளைக் கையாள, இசைக் கருவிகளை இயக்கச் சீக்கிரமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் குரங்குகள் கூட்டமாகவே வாழும்.


பொனொபோ குரங்கை முதன்முதலில் கண்டுசொல்லிய பெருமை செர்மன் நாட்டவரான உடற்கூறியலாளர் (அல்லது என்புகூட்டியலார் (anatomist)) எர்னசுட்டு சுவார்ட்ஃசு (Ernst Schwarz) என்பவரைச்சேரும். அவர் 1928 இல் பெல்சியம் நாட்டு தெர்வுரென் அருங்காட்சியகத்தில் (Tervuren museum) இருந்த, ஒரு குட்டி சிம்பன்சியினுடையது என்று அதுகாறும் கருதப்பட்ட, மண்டை ஓடு ஒன்றை ஆய்ந்த போது இந்த உண்மையை கண்டறிந்து, 1929 ல் வெளிப்படுத்தினார். 1933 இல் அமெரிக்கரான. என்புகூட்டியலார் அரால்டு கூலிட்சு (Harold Coolidge) பொனொபோ குரங்குகளின் விளக்கமான அடையாளங்களை கொடுத்தது மட்டுமன்றி அவற்றை ஒரு தனி இனமாகவே உயர்த்தினார். இந்த இனம் நீளமான கால்களை உடையனவாகவும், தாய்வழிப் பண்பாட்டை போற்றுவனவாகவும், அதன் சமூகத்தில் பாலியல் நடவடிக்கைகளில் முன்னணி பங்கு கொள்ளும் இயல்பு கொண்டனவாகவும் தனித்து தென்படுகின்றன.


இந்த முதனிகள் (primate) முதன்மையாக கனியுண்ணிகள் (frugivorous). ஆனால் இலைகள் மற்றும் சில நேரங்களில் பறக்கும் அணில், குட்டி தியூய்க்கர் (duikers) போன்ற சிறு விலங்குகளையும் முதுகுத்தண்டு இல்லா உயிரினங்களையும் உண்டு தன் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்ளும்.


பெயர்


பொதுமை பெயர்


பொனொபோ என்னும் பெயர் முதன்முதலில் 1954ல் தான் காணப்பட்டது. எட்வர்டு திராட்ஃசு மற்றும் ஐன்சு ஃகெக்கு (Edward Tratz and Heinz Heck) இருவரும், குறள சிம்பன்சிகளுக்கு ஒரு புதிய, தனித்த பொதுப்பெயராக இந்த பெயரை சூட்டினார்கள். இந்த சொல் பண்ட்டு (Bantu) மொழியில் சிம்பன்சி அல்லது முன்னோர் என பொருள் தரும் சொல்லாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த சொல் காங்கோ ஆற்றின் கரையில் உள்ள பொலொபொ (Bolobo ) என்ற நகரின் பெயர்த்திரிபு ஆக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நகர் 1920ல் சிம்பன்சிகள் சேகரிப்பில் தொடர்பு படுத்தப்பட்டது.


உயிரியல் வகைப்பாட்டுப் பெயர்


பொனொபோவின் அறிவியல் பெயர் பான் பானிஸ்கஸ் (Pan paniscus) . முதல்கட்ட ஆய்வுகளின்படி இவற்றின் மரபணுக்கள் மாந்தர் இனத்துக்கு 98% ஒன்றிய பண்புகள் கொண்டதாக உள்ளன. அண்மைய ஆய்வுகள் கொரில்லாக்களை காட்டிலும் சிம்பன்ஸிகளே, மனித இனத்துக்கே நெருக்கமாக உள்ளன என சொல்லுகின்றன. மிகவும் அண்மையில் நடைபெற்ற ஜீனோம் ஒப்புமைகளில் சிம்பன்ஸி மற்றும் மந்தர்களின் மரபணு ஒற்றுமைகளை அலசி ஆய்ந்ததில், இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமை அதன் அளவிலும் தன்மையிலும் மிக சிக்கலானதாகவே உள்ளன (complex both in extent and character) என தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், இவ்விரண்டினுடைய 5% ஜீனோம்களை ஆய்ந்ததில், 35 மில்லியன் ஒற்றை நியூக்லியாய்டு மாற்றங்கள், ஐந்து மில்லியன் செருகல்/ நீக்கல் நிகழ்ச்சிகள், மற்றும் குரோமொசோம்களின் வரிசைமாற்றங்களை கண்டுள்ளார்கள். இந்த ஆய்வுகள் வழக்கமான சிம்பன்சியை கொண்டு நிகழ்த்தப்பட்டன். ஆயினும், பொனொபோவுக்கும் சிம்பன்சிக்கும் இடையே உள்ள வேற்றுமைகள், பொனொபோவை சிம்பன்சி இனத்தில் இருந்து பிரித்து விட போதுமான காரணமாக இல்லை.


அண்மைய டி.என்.ஏ. மரபணு ஆய்வுகள், பொனொபோவும், சிம்பன்சியும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு சற்றே குறைவான காலத்தில்தான் பிரிந்தன என்று சொல்லுகின்றன. மாந்தர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் முன்னோடியான இனத்தில் இருந்து சிம்பன்சி கிளை பிரிவு, நான்கு முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. மாந்தர் இனத்தில் இருந்து பிரிந்த இனங்களில் ஹோமோ சேப்பியன் எனப்படும் மதிமாக்கள் இனம் (மதியை பயன்படுத்தும் இனம்) பிற இன்று இல்லாததால் சிம்பன்சி இனமே மாந்தர் இனத்துக்கு மிக நெருக்கமானதாகும்


புறத்தோற்ற பண்புகள்


பொனொபோ விலங்குகள் சிம்பன்சியை விட மெலிந்து காணப்படும். அதன் தலை சிம்பன்சியின் தலையை விட சிறுத்தும் சற்று குறைவாகவே எடுப்பான புருவமேடுகள் கொணடதாகவும் இருக்கும். கறுத்த முகம், சிவந்த உதடுகள், சிறிய காதுமடல்கள், அகலமூக்கு, தலையில் நீண்ட மயிர்கள் உடையதாக இருக்கும். பெண்பாலாருக்கு மற்ற மனிதக்குரங்கு பெண்களைப்போல் தட்டையாக இல்லாமல் சற்று எடுப்பான முலைகள் உடையதாக இருந்தாலும் மாந்தர் இன பெண்களைபோல் மிகுந்த எடுப்பாக இராது. பொனொபோக்கள் ஒல்லியான மேல் உடலும், மெலிந்த தோள்களும், சன்ன கழுத்தும், சிம்பன்சிகளை ஒக்கும் அளவுக்கு நீண்ட கால்களும் கொண்டன. இவை நிலமிசை நகர்கையில் 25% நேரம் தன் இருகால்களால் நிமிர்ந்து நடக்கும். இந்த பண்புகளும் அமர்கின்ற (posture) நிலையும் பொனொபோக்கள், சிம்பன்சி தோற்றத்தை விட, மாந்தர்களை போன்ற தோற்றத்தையே தருகின்றன. இதற்கும் மேலாக மாந்தர்களை போல் பொனொபோக்கள் ஒவ்வொன்றும் தனித்த முக சாடைகளை கொண்டு, ஒன்று மற்றதை விட குறிப்பிட்ட வேற்றுமையுடன் இருப்பதால் சமூக உறவுகளில் பார்த்தே அறிந்துகொள்ளும் தன்மை கொண்டனவாகவும் உள்ளன


உளவியல் பண்புகள்


ஃப்ரான்ஸ் டி வால் என்ற உலகின் முன்னணி முதனியியலார் (primatologist) சொல்லும்போது, பொனொபோக்கள் பிறநலம் பேணுவனவாகவும், கனிவு, தன்னைபோல் பிறரையும் பாவித்தல் (empathy), கருணை, பொறுமை மற்றும் உணர்வுகள் கொண்டனவாக இருக்கவல்லன என்கிறார்.


காடுகளில் வாழும் சிம்பன்சி சமுதாயங்களை கவனித்ததில், அதன் ஆண்கள் பிற குழுக்களில் இருக்கும் ஆண்களிடம் மிகுந்த பகைமையை காட்டின. ஆண் கும்பல்கள், தனியாக திரியும் பிற ஆண் சிம்பன்சிகளை தேடி அதனை தாக்குகின்றன. அன்றியும், பல நேரங்களில் கொன்றும் விடுகின்றன. (சில ஆய்வாளர்கள் சிம்பன்சியின் இந்த பகைமை குணத்துக்கு மனிதர்களின் தொடர்பு மற்றும் காடுகள் அழிவதால் விளையும் இடநெருக்கடியை காரணமாக சொல்லுவார்கள்.) ஆனால் பொனொபோ ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டனிடமும் இந்த நடத்தை இல்லை. அவை வெளியாட்களிடம் மோதல் கொள்வதினும் காதல் உறவு கொள்வதே மேலானது என கொள்கின்றன. பொனொபோக்களோ, வன்முறை வழக்கமுடைய சிம்பன்சிகள் வாழும் இடத்தை விட்டு வேறு இடங்களில் வாழ்கின்றன. இரண்டு இனங்களும் நீச்சல் அறியா. எனவே காங்கோ ஆற்றின் சில இடங்களில் வெவ்வேறு கரைகளில் வாழுகின்றன. பொனொபோக்கள் அமைதி வாழ்க்கைக்கு, அவை வாழும் இடத்தில் ஊட்டம் மிக்க தழைகள் ஏராளமாக இருப்பதால், கூட்டமாக மேய்வதற்கு தோதாக இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.


பொனொபோக்களின் இந்த பரவலான மதிப்பு தற்போது ஒரு சிலர் கேள்விக்கும் உரித்தாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் ஒன்றை ஒன்று தாக்கி கொள்வதும் குதறிக்கொள்வதும் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன். ஆனால் இந்த நிகழ்வுகள் காட்சியகங்களில் தாய் மகன்களை பிரித்து வைப்பதால் இருக்கலாம். பொனொபோ சமுதாயம் பெண்களின் ஆதிக்கம் கொண்டது என்பதால், தாய்க்கும் அதன் ஆண் வாரிசுகளுக்கும் இடையே உள்ள ஆயுள் முழுக்க நீடிக்கும் உறவை துண்டிப்பது, பெண்களின் வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். டி வால் (De Waal) என்பவர் பொனொபோக்களை காதல் விலங்குகளாக தீட்டுவதன் இடறுகளை எச்சரிக்கிறார், “எல்லா விலங்குகளும் இயற்கையாகவே தம்முள் போட்டி இடும், ஒரு குறிப்பான சூழல்களில் மட்டும் ஒத்துழைக்கும் தன்மையன. முதன்முதல், நான் சமாதான காதல் என்று எழுதியது என்னெனில் பொனொபோக்கள் இடையே பல மோதல்கள் இருந்தன். அவைகள் சிறந்த ஒற்றுமையுடன் இருந்தால் சமாதானம் ஏன் தேவைப்படும்?” இதற்கு மாறாக, சிம்பன்சிகளை போல், பொனொபோக்களிடையே, காடுகள் என்றாலும் காட்சியகங்கள் என்றாலும், சாவு நிகழ்த்தும் வன்முறைகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் இல்லை. ஆனால் சிம்பன்சிகளைபோல் போதுமான ஆய்வுகளை, காடுகளில் வாழும் பொனொபோக்கள் மேல் இன்னும் செய்யப்படாததால், அதன் கொலைவெறி வன்முறைத்தன்மை இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும்


பாலியல் நட்புறவு ஒழுக்கம்


பொனொபோ குழுமத்தில் பாலியல் கலவி (உடலுறவு) ஒரு பெரும் பங்கு கொள்கிறது. இந்த செய்கை, பிறரை வரவேற்பதாகவும், பிணக்குகளுக்கு தீர்வு காணும் வழியாகவும், தகராறுகளுக்குப்பின் நல்லிணக்கம் பெறுவதாகவும், பெண்கள் பெறும் உணவுக்கு கைமாறாகவும் பயன்படுகிறது. ஒரே ஒரு ஜோடி காங்கோ கொரில்லாக்கள் அன்றி, பொனொபோக்கள் மட்டுமே மனித குரங்குகளில், மல்லாந்து கலவி செய்வது (பல தடவை பெண்-பெண், அடுத்து ஆண்- பெண், மற்றும் ஆண்- ஆண்), நாவால் வருடி முத்தம் இடுவது மற்றும் வாய்வழிப் பாலுறவு போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை கவனித்துள்ளார்கள். மிக அண்மையில் கொரில்லாக்களும் மல்லாந்து கலவி செய்தலை கவனித்து உள்ளார்கள். In scientific literature, the female-female sex is often referred to as GG rubbing or genital-genital rubbing, while male-male sex is sometimes referred to as penis fencing.


பாலியல் நடவடிக்கைகள் பல நேரங்களில் வளர்ந்தவர்-பிள்ளைகள் இடையேயும் சிலநேரங்களில் குட்டிகளுடனும் என நெருங்கிய குடும்பத்தாரிடையேயும், பிறத்தியாரிடையேயும் நடைபெறுகின்றன. எந்த இரண்டு பொனொபோக்களும் நிலையான உறவுமை ஏற்படுத்திக் கொள்வது இல்லை. தாய் – வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்ற ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் கடைப்பிடித்து, வயது, பால் என்ற வேறு பாடு இன்றி இந்த பாலுறவு கொள்ளுகின்றன். சில ஆய்வாளர்கள் இந்த ‘தாய் – வளர்ந்த ஆண் பிள்ளைகள்’ உறவு, மட்டும் ஒரு தீட்டு (taboo) போல் என்று நினைக்கிறார்கள். பொனொபோக்கள் உணவு இருக்கும் இடங்களை புதிதாக கண்டால், அவைகளின் அந்த ஆர்வமிகுதி, வழக்கம்போல் கூட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யும். இந்த செயல், அவைகள் தம்முள் ஏற்படக்கூடிய இறுக்க உணர்வை தளர்த்தி ஆர அமர்ந்து உணவு உண்ண ஏதுவாகின்றன.


பொனொபோ ஆண்கள் அடிக்கடி பல்வேறு ஆண்-ஆண் பாலுறவு செயல்களில் ஈடுபடுகின்றன். ஒரு நிலையில் இரண்டு ஆண்கள் கிளைகளில் இருந்து தொங்கிக்கொண்டு தம் பால் உறுப்புக்களால் மோதி விளையாடும். இதையே படுத்துக்கொண்டும் செய்யும். குறிப்பாக “பின்தட்டு தேய்த்தல்” எனறு கூறப்படும் முறையில் இரண்டு ஆண்கள் ஒரு பிணக்குக்கு பின நல்லிணக்கம் உற்றதற்கு அடையாளமாக, அவ்விரண்டும் ஒன்றன் முதுகு மற்றதன் முதுகொடு ஒட்டி நின்றுகொண்டு, அவர்களிண் விதைப்பைகளை (scrotal sacs) ஒன்றொடுஒன்று தேய்த்துக் கொள்ளுமாம்.


பொனொபோ பெண்களும் பிற பெண்பாலாரிடம் நல்லிணக்க ஒட்டுதலை ஏற்படுத்தி, பொனொபோ சமூகத்தில் பெண்களை ஒன்று திரட்ட, பெண்-பெண் பாலுறவில் ஈடுபடுமாம். இந்த ஒற்றுமை பொனொபோ சமுதாயத்தில் பெண்களை மேலாதிக்கம் பெறவைக்கிறது. ஆண் பொனொபோக்கள் தனிப்பட்டு வலிமையானதாக இருந்தாலும், ஒன்று திரண்ட பெண்கள் எதிரே நிற்க இயலாது. பருவம் வந்த பெண்கள் பெரும்பாலும் தம் கூட்டத்தை விட்டு விலகி பிற கூட்டங்களில் இணைந்து கொள்கின்றன். பிற பெண்களுடனான இந்த பாலியல் ஒட்டுறவு, புதிய பெண்களை மற்ற குழுக்களில் எளிதே உறுப்பினராக்கி விடுகிறது.


பொனொபோக்களின் ஈனும் திறன் பொதுவான சிம்பன்சிகளை விடவும் அதிகம் இல்லை. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு குழவியை ஈன்று, அதை ஐந்து ஆண்டு வரை சுமந்தும், பாலூட்டியும் வளர்க்கும். பொதுவான சிம்பன்சிகளை ஒப்பிடுகையில் பொனொபோ பெண்கள் குட்டி ஈன்ற பின் மிக விரைவில் கருவுறு சுழற்சியை (genital swelling cycle) அடைகின்றன. இது அவை மீண்டும் தங்கள் சமூகத்தில் பாலுறவு தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. மேலும் பொனொபோ பெண்கள் மலடாக இருப்பினும் அல்லது பிள்ளை பெற முடியாத அளவுக்கு இளையதாக இருப்பினும் பாலியில் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.


கிரெய்க் ஸ்டான்ஃபோர்ட் (Craig Stanford) எனும் அமெரிக்க முதனியியலார் (primatologist), பொதுவான சிம்பன்சிகளை காட்டிலும், பொனொபோக்கள் அதிக பாலியல் உறவு மேற்கொள்வன அல்ல என்ற அறைகூவல் விடுகிறார். அவர், இயற்கையான வாழ்விடங்களில், ஏற்கனவே உள்ள சிம்பன்சி மற்றும் பொனொபோக்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு, பெண் பொனொபோக்கள் புணர்ச்சி செய்யும் எண்ணிகைக்கு ஒப்ப பெண் சிம்பன்சிகளும் புணர்ச்சி செய்கின்றன் என்றும், ஆண் சிம்பன்சிகளோ ஆண் பொனொபோக்களை காட்டிலும் அதிகமாகவே புணர்ச்சியில் ஈடுபட்டன என்றும் கண்டார். ஆனால் இவரது ஒப்பீடு, பொனொபோக்கள் இடையே பரவலாக காணப்படும் ஓரின பாலுறவுகளை கணக்கில் சேர்க்கவில்லை. டீ வால் (De Waal) என்பவரின் பொனொபோ பற்றிய நூல், களப்பணியாளர்களின் பேட்டிகள், மற்றும் காடுவாழ் பொனொபோக்களொடு இருபது ஆண்டுகள் பணியாற்றியவரான டாக்யோஷி கனொ Takayoshi Kano என்பாரது குறிப்புக்களையும் கொண்டுள்ளது. ஜெர்மன், லெய்ப்ச்ஜிக் நகர மேக்ஸ் ப்ளாங்க் தளிர்ப்புநிலை மாந்தரியலுக்கான நிறுவனத்தில் (Max Planck Institute for Evolutionary Anthropology of Leipzig, Germany) துணை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் காட்ப்ரைடு ஹாப்மான் (Gottfried Hohmann) ஆப்பிரிக்காவில் கண்டறிந்தவைகளில் இருந்து, பொனொபோக்களிடை குறிப்பிடத்தக்க வன்முறை உள்ளது என தெரிகிறது. ஆனாலும் சாவு நிகழ்த்தும் வன்முறைகள் சிம்பன்சிகள் இடையே சான்றுகளோடு இருக்க, பொனோக்களிடம் அவை இருப்பதற்கு ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பது மட்டும் மிகவும் உண்மை.


சமூகம் சார்ந்த பிற நடத்தைகள்


பெண் பொனொபோக்கள் ஆணைவிட உருவத்தில் சற்று சிறியதாக இருந்தாலும், சமூகத்தில் உயர் மதிப்பிடத்தை கொண்டுள்ளன. பெண்களிடையேயான இந்த வலிமையான ஒட்டுறவு, பெண் குழுக்கள் பொனொபோ சமுதாயத்தில் மேலாதிக்கம் கொள்ள செய்கிறது. ஆண், பெண்கள் இடையே ஆதிக்க போட்டிகள் காண்பது மிக அரிது. அதேபோல் குழந்தைகள் சிறாரிடம் ஆண் பொனொபோக்கள் மிகுந்த பொறுமையை கொண்டுள்ளன. ஆணின் மதிப்பிடம் அதன் தாயின் மதிப்பிடத்தை பொறுத்தது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒட்டுறவு அதன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வலுவோடு இருக்கின்றது. சமூகத்தில் ஏற்றத்தாழவுகள் இருப்பினும், பிற முதனி சமூகங்களில் தென்படுவது போல். ஒன்றின் மதிப்பிடம் அதற்கு எவ்வித முக்கிய பங்கும் தருவது இல்லை.


பொனொபோக்கள் விடியல் முதல் கருக்கல் வரை பிரிதல்-சேர்தல் பாணியில் சுறுசுறுப்பாக இருக்கும். நூறு எண்ணிக்கை உடைய ஒரு கூட்டம் பகலில் உணவு தேடல் பொருட்டு சிறிய குழுக்களாக பிரிந்து, இரவில் உறங்குவதற்காக மீண்டும் ஒன்றாக சேரும். இவைகள் மரங்களின் மேல் கூடுகள் அமைத்து அவற்றில் உறங்கும். பிற குரங்குகளை வேட்டை ஆடும் சிம்பன்சிகளைப் போல் அல்லாமல், பொனொபோக்கள் அடிப்படையில் கனி வகைகளை உண்பவையே. இருந்தும், அவை பூச்சிகளையும், சில நேரங்களில் அணில், மான் இனத்தில் ஒருவகையான டியூக்கர் (duiker) போன்ற சிறு பாலூட்டிகளை கைப்பற்றுவதையும் கவனித்து உள்ளார்கள்.


மாந்தரினத்துக்கு நெருக்கம்


பொனொபோக்கள், கண்ணாடி கொண்டு தன்னை அறியும் சோதனைகளில் தேர்ச்சி பெறும் திறன் உள்ளவை. அவைகள் முதன்மையாக குரல் ஒலியால் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றன என்றாலும், அந்த குரல் ஒலிகளின் பொருள் இன்னும் விளங்கப்படவில்லை. இருந்தாலும் அவைகளின் முகவெளிப்பாடுகளை, மற்றும் “தன்னோடு வந்து விளையாடு” என கேட்கும் இயற்கையான கையால் செய்யும் சைகைகளை மனிதர்கள் புரிந்துகொள்ளலாம். Great Ape Trust எனும் நிறுவனத்தை சேர்ந்த கான்சி மற்றும் பான்பனிசா (Kanzi and Panbanisha) எனும் இரண்டு பொனொபோக்களுக்கு 3000 க்கும் மேலான சொற்களை பயிற்றுவித்ததில் அவற்றை வரைகணிதக் குறியீடுகளைக் கொண்டு (lexigrams or geometric symbols) அடையாளம் காட்டும் வல்லமை பெற்றுள்ளன. மேலும் அவை பேசப்படும் சொற்றொடர்களுக்கு ஏற்ப செயல்படும் திறனும் கொண்டன. இதனால், மெய்யியலார் மற்றும் உயிர்களிடை அறம்பேணுவோரான (philosopher and bioethicist Peter Singer) பீட்டர் சிங்கர் போன்றோர் சிலர், இதுபோன்ற ஆய்வு முடிவுகள், மனிதர்கள் பிறருக்கு கொள்கை அளவில் தரும் வாழும் உரிமையை, பொனொபோக்களும் பெறும் தகுதி கொண்டன என்று வாதிடுகிறார்கள்.


வாழ்விடம்


ஏறத்தாழ 10,000 பொனொபோக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு புழுக்கமான காடுகளில், காங்கோ ஆற்றின் தெற்கும், அதன் துணையாறு (Tributory) கசாய் ஆற்றின் (Kasai River), வடக்கும் மட்டுமே காண படுகின்றன. அவை வாழுமிடம் அருகுவதாலும் இறைச்சிக்காக வேட்டை ஆடப்படுவதாலும் அழிவு நிலையில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு போர்களால், ஆயுதம் தாங்கிய போராளிகள் காடுகளின் உட்பகுதிகளில், சலோங்கா தேசீய பூங்கா (Salonga National Park) போன்ற காவல்படுத்தப்பட்ட பகுதிகளிலும் ஊடுருவியதால், இந்த இறைச்சி வேட்டை திடீர் என அதிகமானது. தற்போது உச்ச எண்ணிக்கையாக சில பல ஆயிரம் பொனொபோக்களே எஞ்சி உள்ளன. பொதுவாகவே எல்லா மனிதக்குரங்குகளின் ஒழியும் நிலையின் போக்கும் இதுதான்.


காக்கும் முயற்சிகள்


1990 இல் நடந்த இருந்து காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் போர்கள், பொனொபோ மற்றும் நாட்டுமக்கள் தொகையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்நாட்டு மக்கள், தற்போது, தங்கள் நலன்களை பாதுகாப்பதில் விருப்பம் கொண்டுள்ளார்கள். வேட்டை ஆடப்படுவதால், பொனொபோக்கள் ஒழியும் இடர்பாடுகளில் உள்ளன. எனவே, பொனொபோக்களை காக்கும் முயற்சிகள், இந்த இரண்டுக்கும் நடுவாக இருக்கவேண்டும்.


பொனொபோக்களின் வாழ்விடம் மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதால். அவைகளை காக்கும் இறுதி வெற்றி, அம்மக்களின் ஈடுபாட்டை பொறுத்தே அமையும். பூங்காவா, மக்களா என்ற கேள்விக்கு, பொனொபோக்களின் வாழ்விடமான குவெட் சென்றேல் (Cuvette Centrale) மிக பொருத்தமான சான்று. பூங்காக்கள் அமைக்கும் போது, மண்ணின் மைந்தர்கள் காடுகளில் இருந்து விரட்டப்படுவதால் அவற்றை ஏற்படுத்துவதற்கு உள்ளூரிலும் பரவலாகவும் காங்கோ மக்களின் எதிர்ப்பு இருக்கிறது. சொலொங்காவில் (Salonga) பொனொபோக்களின் வாழ்விடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரே பூங்காவில், உள்ளூர் மக்களின் பங்கேற்பு இல்லை. அங்கு அண்மையில் நடந்த கணக்கெடுப்பில், பொனொபோ, ஆப்பிரிக்க காட்டு யானை, மற்றும் பிற உயிரினங்களும் கள்ள வேட்டைக்காரர்களாலும், காட்டு இறைச்சி வணிகத்தாலும் கடுமையான சீரழிவு பூண்டுள்ளன. இதற்கு மாறாக, இந்த பூங்காக்கள் இல்லாமலேயே, உள்ளூர் மக்களின் பொனொபோக்களை கொல்லகூடாது என்னும் சமூக நம்பிக்கையால் பொனொபோக்களும் பல்லுயிர்பன்மையும் (biodiversity) செழிப்போடு உள்ளன.


1990 இல் நடந்த போர்களின் போது ஆராய்ச்சியாளர்களும், பன்னாட்டு அரசுசாரா அமைப்புகளும் பொனொபோ வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டனர். 2002 இல், பொனொபோ பாதுகாப்பு முனைவு (Bonobo Conservation Initiative), தேசிய நிறுவனங்கள், உள்ளூர் அரசு சாரா அமைப்புகள், மற்றும் உள்ளுர் மக்கள் துணையுடன், பொனொபோ அமைதி காடுகள் திட்டம் ( Bonobo Peace Forest Project) தொடங்கியது. இந்த திட்டம் உள்ளூர் மக்களின் மேலாண்மைக்கு உட்பட்ட, ஒன்றொடு ஒன்று தொடர்புடைய பல சமுதாயங்களிலும் தனி ஒதுக்கீடுகளை (Reservations) நிறுவி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உதவி இல்லை என்றாலும் , காங்கோ அரசு அமைப்புகள், மற்றும் உள்ளூர் மக்களால் அமுல்படுத்தப்பட்ட் இந்த “மாதிரி” (model), ஏறத்தாழ 5000 சதுர மைல் பரப்பை, பொனொபோக்களின் வாழ்விடத்துக்காக பாதுகாக்கும் உடன்படிக்கைகள் ஏற்பட உதவியது. முனைவர் ஏமி பாரிஷ் (Dr. Amy Parish) என்பவரின் கருத்துப்படி, “இந்த பொனொபோ அமைதி காடுகள் திட்டம் 21ஆம் நூற்றாண்டில் விலங்குகள் பாதுகாப்புக்கு ஒரு மாதிரி திட்டமாக அமையும்)”


இந்த முனைவு நாளாக நாளாக ஊக்கம் மற்றும் பெரிய அளவில் பன்னாட்டு அங்கீகாரம் பெற்று, Conservation International, the Global Conservation Fund, United States Fish and Wildlife Service’s Great Ape Conservation Fund, மற்றும் the United Nations’ Great Apes Survival Project போன்ற நிறுவனக்களின் மேலான ஆதரவை பெற்றுள்ளது.


வெளி இணைப்புகள்

பொனொபோ – விக்கிப்பீடியா

Bonobo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.