நான்கு கொம்புள்ள, பேபிரூசா செலெபென்சிசு (Babyrousa celebensis) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சுலவேசி நாற்கொம்புப் பன்றி இனம் இந்தோனீசியத் தீவுகளில் வடக்கு சுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த்தாடையின் நாய்ப்பற்கள் அல்லது புலிப்பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேல்தாடையின் மேலே நெற்றியை நோக்கி வளைந்து செல்லும் இரண்டு கொம்புகளும் எயிறே. இவ் விலங்கு சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு.
அறிவியற் பெயராக உள்ள பேபிரூசா (அல்லது பாபிரூசா) என்பது மலாய் மொழியில் உள்ள, பாபி (babi = பன்றி) + ரூசா (rusa = மான்) ஆகிய இருசொற்களின் கூட்டு ஆகும். மானின் கொம்பு போல் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
வெளி இணைப்புகள்
சுலாவெசி நாற்கொம்புப் பன்றி – விக்கிப்பீடியா