புள்ளிமான்

புள்ளி மான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப்பகுதிகளில் வாழும் ஒரு வகை மானினம். இது பாக்கித்தானிலும் சிறு அளவில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் அதிகம் காணப்படும் மானினம் இதுவேயாகும். இது தெலுங்கானாவின் மாநில விலங்காகும்.


இந்தியாவில் தோன்றிய இந்த மானினம், பின்னர் இங்கிருந்து நேபாளம், பூட்டான், இலங்கை உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளுக்குப் பரவியது. பிறகு இந்த நாடுகளிலிருந்து, இந்த மான்களை தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்குக் கொண்டுசென்று வளர்க்கத் தொடங்கினர். புல்வெளிகளும், நீர்நிலைகளும் நிறைந்திருக்கிற காடுகளில் புள்ளி மான்கள் அதிக அளவில் காணப்படும். புள்ளி மான்கள் எப்போதும் கூட்டமாகவே சுற்றித் திரியும் சமூக விலங்கு ஆகும். புலி, சிங்கம் போன்ற வேட்டை விலங்குகளின் முக்கிய உணவாக இவை இருப்பதால், இவை எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். இரைகொல்லிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், தன் கூட்டத்தையும் சேர்த்துக் காப்பாற்றுவதற்காக, எச்சரிக்கைக் குரலை எழுப்பிவிட்டு இவை ஓடும். இவை மணிக்குச் சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியன.


இதன் தோல் பழுப்பு நிறத்திலும் வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்படும். இதன் காரணமாகவே இது புள்ளிமான் என்றழைக்கப்படுகிறது. இதன் அடிப்பாகம் வெண்ணிறத்தில் இருக்கும். இந்த மான் இனத்தில் ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகளை ஆண்டுக்கு ஒரு முறை உதிர்க்கும். பொதுவாக மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் இதன் கொம்பு இரண்டரை அடி நீளம் வரை வளரும். மூன்று அடி உயரம் வரையும் 85 கிலோ எடை வரையும் புள்ளிமான்கள் வளரும். ஆண் மான்கள் பெட்டைகளை விடப் உருவில் பெரிதாக இருக்கும். இது 8 முதல் 14 ஆண்டுகள் வரை வாழும்.


வெளி இணைப்புகள்

புள்ளிமான் – விக்கிப்பீடியா

Chital – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.