நாற்கொம்பு மான்

நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis) தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மறிமானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும், ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்து குசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேப்பாளத்திலும் வாழ்கின்றது. இந்த மானிற்கு இந்தியில் செளசிங்கா என்று பெயர், இதற்கு “நான்கு கொம்புகள்” என்று பொருள்


படிவளர்ச்சியும் பரவலும்


இவை போசிலாபினி என்னும் குலத்தைச் சேர்ந்த விலங்காகும். இக்குலத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அற்றுப்போய்விட்டன, எஞ்சியிருப்பது நாற்கொம்பு மானும் நீலமானுமாகும் மட்டுமே. கொம்புகளில் வளையங்கள் இல்லாமல் இருப்பது இக்குலத்தின் முக்கிய பண்பாகும், மேலும் இப்பண்பே இவற்றை மற்ற மானினங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இக்குலத்தை சேர்ந்த விலங்குகள் பழக்க வழக்கங்களிலும், உடலமைப்பிலும் சற்று மூதாதைய விலங்குகளை ஒத்து இருக்கும்.


நாற்கொம்பு மான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்தாலும் எங்கும் அதிகமான தொகையில் வாழ்வதில்லை. இவை உலர் இலையுதிர் காடுகள் மற்றும் உலர் புறநிலத்திலும் அதிகம் காணப்படுகின்றன.


உடலமைப்பு


வளர்ந்த விலங்கு 55-60 செ.மீ உயரமும் 20 – 22 கிலோ எடையும் கொண்டிருக்கும். இவ்விலங்கின் வெளித்தோல் பழுப்பு நிறத்தில் இருக்கும், இந்நிறம் பருவமழைக்குப் பிறகு சற்று அடர்த்தியாகவும் பின் குளிர்காலத்தில் சற்று வெளிரியும் காணப்படும். கால்களில் குளம்புகளுக்கு மேல் வெள்ளை நிற வளையம் ஒன்றிருக்கும். கண்களை அடுத்து கண்குழி சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர் புற்கள் மற்றும் கிளைகளைக் குறிக்க உதவுகின்றது. பெண் விலங்குகளுக்கு கொம்புகள் இராது. ஆண்களுக்கு நான்கு கொம்புகள் இருக்கும். இதில் பின்புறம் உள்ள இரண்டு கொம்புகள் பிறந்த சில மாதங்களிலேயே முளைக்கத் தொடங்கிவிடும். முன்புறம் உள்ள கொம்புகள் பிறந்ததிலிருந்து 14-15 மாதங்களுக்குப் பின் முளைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பின் கொம்புகள் பெரிதாகவும் முன் கொம்புகள் சிறிதாகவும் காணப்படும். முன் மற்றும் பின் கொம்புகளின் நீளம் மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள் போன்றவை அவ்விலங்கு உண்ணும் உணவு மற்றும் வாழிடம் போன்றவற்றால் மாறுபடுகின்றன.


இனப்பெருக்கம்


இவ்விலங்கில் இனப்பெருக்கம் சூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக் காலத்தில் நடக்கும். இவற்றின் சூல்கொள்ளல் காலம் 7.5 முதல் 8 மாதம் வரையாகும், ஒரு முறையில் 1 முதல் 3 குட்டிகள் வரை தாய் ஈன்றெடுக்கும். பிறக்கும் குட்டியானது முயலின் உருவ அளவில் இருக்கும். குட்டியைப் பாதுகாக்க தாய் அடர்ந்த புதர்களுக்கிடையே வாழும். குட்டிகளுக்கு ஊணுண்ணி விலங்குகள் அல்லது இரைவாரிச் செல்லும் பறவைகளால் ஆபத்து அதிகமாக உண்டு. இவற்றின் சராசரி ஆயுட்காலம் சுமார் பத்து வருடங்கள் ஆகும்.


சூழியல் மற்றும் நடத்தை


பெரும்பாலும் இலை, புல், மற்றும் பழங்களை மேய்ந்து உட்கொள்ளும் இவ்விலங்கு உலர் இலையுதிர் காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இவை பூ மற்றும் பழங்கள் அதிகமாக ஈனும் மூங்கில், நெல்லி, தும்பிலி போன்ற தாவரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகமாக வாழ்கிறது. இவை வெப்பப் புல்வெளிகளில் வாழும் தாவரங்களையும் உண்ணுவதாக அறியப்பட்டுள்ளது.


இது மிகவும் கூச்ச உணர்வு கொண்ட விலங்காகும். ஆபத்தை உணர்ந்தவுடன் அருகிலுள்ள புதரில் சென்று ஒளிந்துக்கொள்ளும் தன்மையுடையது. நாற்கொம்பு மான்கள் எப்பொழுதும் நீர்நிலைகளின் அருகாமையில் மட்டுமே வசிக்கும், ஏனெனில் இவை மிக அதிகமான நீர் பருகும் பழக்கம் உடையன. ஆண்களில் இனப்பெருக்ககாலத்தில் எல்லைப் பாதுகாத்தல் மற்றும் ஏனைய நடத்தைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. பெரும்பாலும் ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் 0.5 விலங்குகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஒன்று அல்லது இரண்டு விலங்குகளாக சுற்றித்திரியும்.


இவ்விலங்கு சிறுத்தை, புலி, ஓநாய், செந்நாய் மற்றும் சில காட்டுப் பூனை போன்ற ஊனுண்ணி விலங்குகளால் வேட்டையாடப்படுகிறது.


காப்பு நிலை


இவ்விலங்கிற்கென்று சிறப்பு காப்பு நிகழ்வுகள் ஏதுமில்லை. ஏனெனில் இவ்விலங்கைப் பற்றிய ஆய்வுகள் குறைவே. இவ்விலங்கின் உயிர்த்தொகைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இதன் வாழிடம் அழிவிற்குள்ளாகுவாது ஆகும். மேலும் காடுகளுக்குள் நீர்நிலைகளின் அழிவு இவ்விலங்கிற்கு பெரும் தீங்கிழைக்கிறது.


நாற்கொம்பு மான் இந்தியாவின் முதலாம் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் இவ்விலங்கை வேட்டையாடுவது இந்திய வனவிலங்கு சட்டம், 1972-ன் படி குற்றமாகும். இந்தியாவில் காணப்படும் மானினங்களிலேயே மிகவும் குறைந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது நாற்கொம்பு மானைப் பற்றியே. இவ்விலங்கைப் பற்றிய ஆராய்ச்சிகள் இவ்விலங்கை காப்பதற்கு வழிவகுக்கும்.


இம் மான் இன்னமும் பரவலாக காணப்பட்டாலும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தற்பொழுது 1,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என கருதப்படுகின்றது


வேட்டையாடலும் இதன் இறைச்சியும்


இம் மானின் கொம்புகள் சிறியனவாக இருந்தாலும், நான்கு கொம்புகள் இருப்பதால் வேட்டையாடுவோர் இதனை அரிய பரிசாகக் கருதுகிறார்கள். இம் மானின் இறைச்சி மற்ற மான்களின் இறைச்சியைவிட சுவை குறைந்ததாகப் பலரும் கருதுவதாக வாக்கரின் நூல் குறிப்பிடுகின்றது

வெளி இணைப்புகள்

நாற்கொம்பு மான் – விக்கிப்பீடியா

Four-horned antelope – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.