வெள்ளை இரலை என்பது சகாராப் பாலைவனப்பகுதியில் காணப்படும் ஒரு பெரிய இரலை மான் இனமாகும். இது அடாக்சு என்றும் திருகுகொம்பு இரலை என்றும் வழங்கப்படுகிறது. இவை முறுக்கிய நீளமாக கொம்புகளைக் கொண்டுள்ளன. பெண்ணில் கொம்பு 55 முதல் 80 செ.மீ வரையும் ஆணில் 95 முதல் 110 செ.மீ நீளம் வரையும் கொம்பு வளரும். இவற்றால் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கவியலும். பெண் இரலை ஆணை விட அளவில் சிறியதாக இருக்கும். இந்த இரலைகளின் தோல் நிறமானது பருவகாலத்தைப் பொறுத்து மாறக்கூடியது. கோடையில் வெண்ணிறமாகவும் குளிர்காலத்தில் இது பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
இவை ஐந்து முதல் இருபது வரையிலான கூட்டமாக வாழும். வயதான பெண் இரலையே கூட்டத்தினை வழிநடத்தும். இவை மெதுவாக நகர்வதால் கொன்றுண்ணிகளாலும் மனிதர்களாலும் எளிதில் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. வறண்ட பகுதிகள், மிதமான பாலைநிலங்களே இவற்றில் இயல்பான வாழிடங்கள்.
இவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.