நரிமூக்குப் பழவௌவால் அல்லது நரிமூக்கு இந்தியப் பழ வௌவால் (greater short-nosed fruit bat) என்பது வெளவால் குடும்பத்தில் பழ வௌவால் சிற்றினம். இது தென் ஆசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது.
விளக்கம்
இவ் வெளவால்கள் நீண்ட மூக்கு அமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றன. மேற்பகுதி பழுப்பிலிருந்து சாம்பல்-பழுப்பாகவும் கீழ்ப்பகுதி மங்கலாகவும் காணப்படும். உரோமம் மிருதுவாகவும் பட்டுப் போன்றும் காணப்படும். காது மற்றும் இறகு என்புகளின் ஓரங்கள் வெண்ணிறமாகவும் காணப்படும். கீழ்தாடைப் பற்கள் கூரற்று வட்டமாகக் காணப்படும். வளர்ந்த வெளவாலின் இறக்கையின் குறுக்களவு 48 செ.மீ. ஆகும். இளம் வௌவால்கள் வளர்ந்த வெளவால்களைவிட பாரம் குறைந்தவை. இவற்றின் முன்னங்கையின் நீளம் 70.2 மிமி (64-79மிமி) ஆகும்.
வசிப்பிடம்
இவை பாக்கித்தான், வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்சு, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பழவகைப் பயிர்கள் அறுவடை செய்யப்படும் வெப்ப வலயக் காடுகளில் இவ்வகையினம் பொதுவாக் காணப்படுகி்ன்றன. இவை புல்வெளிகளிலும் அலையாத்திக் காடுகளிலும் காணப்படும். சிறப்பான இவற்றின் கூடுகள் பனை மரங்களில் கட்டப்படும். வௌவால்கள் பனையின் இலை போன்ற பகுதிகளை மொன்று சாதாரணமான கூடுகளை அமைக்கின்றன. பனைகள் இல்லாத பகுதிகளில் அவை கட்டடங்களில் படரும் கொடிகளாலும் இலைகளை இணைத்தும் கூட்டினை அமைக்கும்.
நடத்தையும் இனப்பெருக்கமும்
இவ்வினங்கள் கூட்டமாய், தங்குமிடத்தின் ஒரே பாலைச் சேர்ந்த 8 முதல் 9 வௌவால்கள் வரை வாழும். இனப்பெருக்கக் காலம் அல்லது குழுவின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை ஆண், பெண் என தனித்திருக்கும். பலமனைவி மணப் பழக்கம் உடைய இவை, பொதுவாக இனப்பெருக்கக் காலத்தில் 6-10 ஆண்கள் 10-15 பெண்களுடன் பனையிலுள்ள கூடுகளைப் பகிர்ந்து கொள்ளும். இனப்பெருக்க புணர்ச்சியின்போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனம் இந்த வௌவால் இனமாகும். புணர்ச்சியின் பின் சிறிது நேரம் பெண்களுடன் தங்கும் ஆண்கள் பின் ஒரே பால் குழுக்களிடம் திரும்பிவிடும்.
வெளி இணைப்புகள்
நரிமூக்குப் பழவௌவால் – விக்கிப்பீடியா