ஹுலக் கிப்பான் குரங்கு

ஹுலக் கிப்பான் அல்லது வெள்ளைப் புருவக் குரங்கு (Hoolock gibbon) என்பது கிப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதனி விலங்கினம் ஆகும். இவை வங்கதேசம், வடகிழக்கு இந்தியா, தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவைதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கு ஆகும். இதுவே மிசோராமின் மாநில விலங்காகும்.


விளக்கம்


கிப்பன் இனங்களில் இது இரண்டாவது பெரிய கிப்பன் ஆகும். இவை 60 முதல் 90 செமீ அளவுவரை வளரக்கூடியவை. 6 முதல் 9 கிலோ எடை இருக்கும். ஆண் பெண் இரண்டும் ஒரே அளவு கொண்டவை. ஆனால் அவை நிறத்தால் கணிசமாக வேறுபடுகின்றன. ஆண் கிப்பன்கள் கருப்பு நிறத்திலும், ஆங்காங்கே பழுப்பு நிறம் கொண்டும் காணப்படும். பெண் குரங்குகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், மார்பு கழுத்து ஆகியவை அடர் நிறத்தில் இருக்கும். ப வெள்ளை நிற வளையங்கள் அவற்றின் கண்கள், வாய் ஆகியவற்றை சுற்றி இருக்கும். புருவங்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும் முகத்தில் முகமூடி அணிந்தது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.


இந்தியாவில் காணப்படும் இடங்கள்


இவை வடகிழக்கு இந்தியாவில் பிரம்மபுத்ராவின் தெற்கு, திபாங் ஆற்றின் கிழக்குக்கு இடைபட்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த பகுதிகளில் இந்தியவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவை அடங்கும்.


நடத்தை


மற்ற கிப்பன்கள் போலவே இவை பகலாடிகள் ஆகும். இதற்கு வளையத்தக்க தோள்பட்டை இருப்பதால் கைகளை நன்கு அசைக்க முடியும். இதன் நீண்ட கைகள் கொக்கிபோல மரக்கிளைகளைப் பிடித்துக் கொள்ளும். ஒரு கையினால் ஒருகிளையை பிடித்துகொண்டு ஊசலாடிக்கொண்டே மறுகையால் இன்னொரு கிளையை பிடித்துக் கொள்ளும். ஆண் பெண் இணையாகவோ, குடும்பமாகவோ வாழ்கின்றன. இவற்றின் முதன்மை உணவு பழங்கள், பூச்சிகள், இலைகள் ஆகும். பெண் குரங்குகள் சூல் கொண்டு ஏழுமாதம் கழித்து குட்டிகளை ஈனுகின்றன. குட்டிகளின் முடிகள் பால் வெள்ளை அல்லது சாம்பல்பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்களுக்கு பின்னர் ஆண் குரங்குகள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாறத்துவங்கும். பெண் குரங்குகள் தனது வாழ்நாள் முழுவதும் சாம்பல்பழுப்பு நிறத்தில் இருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, நன்கு முதிர்ந்து முடிகள் அதன் இறுதி நிறத்தை அடைகிறது. காடுகளில் இவற்றின் வாழ்நாள் சுமார் 25 ஆண்டுகள்.


வெளி இணைப்புகள்

ஹுலக் கிப்பான் – விக்கிப்பீடியா

Hoolock gibbon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.