ஆப்பிரிக்கச் சிறுமான் அல்லது இம்பாலா (Impala) என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் இரலை மானினம். இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில் இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.
தோற்றம்
இதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம். ஆண் சிறுநவ்வி 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து ‘M’ போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் கொம்புகள் உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது. ஆபிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கறுப்புச் சிறுநவ்வி மிகவும் அரியது.
இயல்பு
வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.
மிரண்ட நிலையில் சிறுநவ்விகள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி. மீ. கதியில் ஓட இயலும்.
சிறுத்தைகள், சிங்கங்கள், காட்டு நாய்கள் முதலிய விலங்குகள் சிறுநவ்விகளை இரையாகக் கொள்கின்றன.