நீலான் மான்

நீலான் (Boselaphus tragocamelus) நடு மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாக்கிசுத்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால், இது நீலான், நீலமான், நிலகைமான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது..


உடலமைப்பு


நீலானின் உடல், எடை பற்றிய தரவுகள் நடு இந்தியாவின் இயற்கை உயிர்த்தொகை மற்றும் அமெரிக்காவின், டெக்சாசு மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தொகையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது.


வளர்ந்த ஆண் நீலான் சுமார் 130 முதல் 150 செ.மீ உயரமும் பெண் நீலான் 100 முதல் 130 செ.மீ உயரமும் இருக்கும். ஆண் நீலானுக்கு மட்டும் 15 முதல் 20 செ.மீ நீளமான கொம்பு உண்டு. இதன் கொம்புகள் பருத்து, கூம்பு வடிவில் உறுதியற்று இருக்கின்றன. பெண் நீலான்களும் இளங்கன்றுகளும் வெளிறிய பழுப்பு நிற உடல்மயிர் போர்வையைக் கொண்டிருக்கின்றன. ஆண் நீலான்கள் பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகு உடலின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறத்துக்கும், கால்கள் கறுப்பு நிறத்துக்கும் மாறும். நான்கு ஆண்டுகளில் ஆணின் உடல் முழுவதும் நீலம் கலந்த சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். ஆண், பெண் நீலான்களுக்கு முகம், காதுகள், காற்குழைச்சு (முழங்கால் மூட்டு) வால் ஆகிய இடங்களில் கறுப்பு, வெள்ளை நிறக் குறிகளும், முகத்தில் வெள்ளை நிற முரட்டு மயிரும் இருக்கும். பெண் நீலானைக்காட்டிலும் ஆண் நீலானுக்கு கழுத்தின் பின் பகுதியில் அதிகமான கறுப்பு நிற மயிர்கள் கற்றையாகக் காணப்படும்.


பரவல்


நீலான் இந்தியாவின் உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். முகலாய மன்னர்களின் ஆட்சியின் போது நீலான்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அதிலும் சகாங்கீர் மட்டும் 900 நீலான்களை வேட்டையாடிக் கொன்றுள்ளார். வட, தென்னிந்தியாவின் திறந்தவெளிக் காடுகள் அனைத்திலும் நீலான் காணப்பட்டு வந்தது. முன்னர் நீலானின் தென்கோடிப் பரவல் நிலம் தமிழ் நாட்டின் மேட்டுப்பாளையம் வரை இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. நீலான் தற்போது இமய மலை அடிவாரத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் வட மாவட்டங்கள் வரை காணப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீசுகர், குசராத், அரியானா, இமாச்சல் பிரதேசம், சம்மு காசுமீர், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்தராஞ்சல், சார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் முதலிய 16 மாநிலங்களில் உள்ள 114 பாதுகாக்கப்பட்ட இடங்களில் நீலான், காணப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே பாகிசுத்தானில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது. இந்தியத் துணை கண்டத்தைத் தவிர அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தொகை ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றது. பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நீலான் பெரும்பாலும் விளை நிலங்கள் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றது. இவை சமமான தரை முதல் மலைகள் வரை பல வகையான நிலங்களில் வாழ்கின்றன. அடர்ந்த காடுகள் மற்றும் மலை முடிகளை தவிர்த்தே வாழும் தன்மையுடையவை. பாலை நிலங்களில் நீலான் வாழ்வதே இல்லை.


உயிர்த்தொகை


இந்தியாவில் மிகக் கூடுதலாக காணப்படும் மானினம் ஆயினும் நீலானின் தற்போதைய உயிர்த்தொகை முன்பைக் காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. நீலானின் உயிர்த்தொகை 1970களில் இருந்து குறையத் துவங்கியுள்ளது. இப்போதைக்கு இதன் உயிர்த்தொகை குறித்து சரியாக கணக்கீடுகள் ஏதுமில்லை. இந்தியாவில் மட்டும் சுமார் 100,000 முதல் 150,000 வரையிலான நீலான்கள் இருக்கலாம் எனத் தோராயக் கணக்கு ஒன்று கூறுகிறது. மேலும் இதில் 60 விழுக்காடு அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தில் வாழலாம் என்றும் இக்கணக்கு கூறுகின்றது.


சூழியல்


சமூக வாழ்க்கை


நீலான்கள் இரண்டு முதல் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக அறியப்பட்டுள்ளன. பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுக்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இடத்துக்கு இடம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப மாறுகிறது. நீலான்கள் பெரும்பாலும் மூன்று வகையான குழுக்களாக அறியப்பட்டுள்ளன. அவை:


 • இளங்கன்றுகளுடன் ஒன்று அல்லது இரண்டு பெண் நீலான்கள்

 • ஒரு வயதான கன்றுடன் மூன்று முதல் ஆறு வளர்ந்த நீலான்கள்

 • இரண்டு முதல் 18 எண்ணிக்கையிலான ஆண் நீலான்களைக் கொண்ட குழுக்கள்

 • டெக்சாசு உயிர்த்தொகையில் பால் அடிப்படையிலான குழுக்களைக் காணலாம். இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் குறிப்பாக ஜூலை முதல் அக்டோபர் உள்ளடக்கிய பருவமழைக் காலத்தில் பத்துக்கும் குறைவான ஆண் நீலான்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களைக் காணலாம். டிசம்பர் முதல் மார்ச்சு வரையிலான இனப்பெருக்கக் காலத்தில் ஆண், பெண் நீலான்களைச் சேர்ந்து காணலாம்.


  வாழிடம்


  நீலான்கள் திறந்த வெளிக் காடுகளையே பெரிதும் விரும்புகின்றன. அடர்ந்த காடுகளைத் தவிர்த்து புதர்க்காடுகள் போன்றவை நீலான்களின் வாழிடங்கள் ஆகும். சரிசுகாவில் வானலை கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்ட பெண் நீலானின் வாழிடம் சராசரியாக 3.6 சதுர கி.மீ என்றும், ஆகக்கூடுதலாக 7.3 சதுர கி.மீ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. டெக்சாசு உயிர்த்தொகையில் பெண் நீலானின் வாழிடம் சராசரியாக 0.6 சதுர கி.மீ என்றும், ஆண் நீலானின் வாழிடம் 4.7 சதுர கி.மீ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பகற்பொழுதில் (07:00 முதல் 18:00 மணி வரை) மட்டும் பெரும்பாலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இரவைக் காட்டிலும் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன.


  பழக்க வழக்கங்கள்


  நீலான்கள் பெரும்பாலும் அமைதியானவை. ஆண், பெண் மற்றும் ஐந்து மாதம் கடந்த கன்று அனைத்தும் தொண்டையில் இருந்து ஒலி எழுப்பும். இவ்வொலி சுமார் 500 மீட்டர் தூரம் வரை கேட்கும். இவை அச்சுறுத்தல்களை குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தவே ஒலி எழுப்புகின்றன. சில வேளைகளில் ஆண்–ஆண் சண்டையின் பொழுது மிகக் காட்டமான ஒலியும், தாய்க்கும் கன்றுக்கும் இடையே மென்மையான ஒலிப் பரிமாற்றங்களும் நிகழும். நீலான்கள், கொன்றுண்ணிகளால் துரத்தப்படும் போது மணிக்கு 48 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.


  உணவு


  நீலான்கள் இலைகள், மலரின் மொக்குகள், புற்கள், பழங்களை உணவாகக் கொள்ளும்.


  இயற்கை எதிரிகள்


  நீலான்கள் காடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய், ஓநாய் முதலியவற்றுக்கு இரையாக கொன்றுண்ணப்படுகின்றன.


  இனப்பெருக்கம்


  நீலானில் குறிப்பிட்ட இனப்பெருக்கக் காலம் ஏதுமில்லை. நீலான் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். நடு இந்தியப் பகுதிகளில் அனைத்து பருவ காலங்களிலும் இளங்கன்றுகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரத்பூர் வன உய்விடத்தில் பெரும்பாலான கன்றுகள் மழைக் காலத்தில் (சூன் முதல் அக்டோபர் வரை) ஈன்றெடுக்கப்பட்டுள்ளதும் மிகுதியான இனப்பெருக்க செயல்பாடுகள் நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் நடைபெறுவதும் அறியப்பட்டுள்ளது. விலங்கியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் விலங்குகளில் இனப்பெருக்க காலம் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது.


  இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் சுமார் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகும். இவை பெருப்பாலும் இரண்டு கன்றுகளை ஈன்றெடுக்ககும், சில வேளைகளில் ஒன்று அல்லது மூன்று கன்றுகள் ஈன்றெடுப்பதும் உண்டு. கன்றுகள் 10 மாதத்தில் பாலூட்டலை மறந்துவிடுகின்றன. பிறந்த 18 மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் தகுதியை பெறுகின்றன. இதன் வாழ்காலம் சுமார் 21 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


  காப்பு நிலை


  நீலான்கள் குறைந்த தீவாய்ப்பு உள்ள விலங்காகக் கருதப்பட்டாலும் இவை வேட்டையாடப்படுதல், விளைநிலங்களுக்கு வருவதால் மனிதரால் விரட்டப்படுதல், விளைநில மின்சார வேலிகளில் சிக்கி கொல்லப்படுதல், பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கம் போன்ற அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன.


  வெளி இணைப்புகள்

  நீலான் – விக்கிப்பீடியா

  Nilgai – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.