ஒராங்குட்டான் அல்லது ஓராங் ஊத்தான் (Orangutan) என்பது மனிதக் குரங்குகளில் உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும். இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும். இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினமாகும். இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை. இவற்றின் உடல்சார்ந்த தோற்றம், நடத்தை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக, இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த இனம் தோன்றிய இடம் இந்தோனேசியா, மலேசியாவாக இருந்த போதிலும், இதன் தற்போதைய வாழிடம் சுமாத்திரா, போர்ணியோப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகள் ஆகும். ஆனாலும், ஜாவா, தீபகற்ப மலேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன.
பெயர்க் காரணம்
ஓராங் ஊத்தான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும் . ஒராங் (Orang) என்றால் மனிதன். ஊத்தான் (hutan) என்றால் காடு எனவும் பொருள் தரும்.
மலேசியாவில், இவற்றை ஓராங் ஊத்தான் என்றுதான் அழைக்கிறார்கள். அது ஒரு வழக்குச் சொல் ஆகும். Orang utan எனும் இரு சொற்களும் சேர்க்கப்படுவதால் Orangutan என மாறிவிடுகிறது.
நடவடிக்கைகள்
ஒராங்குட்டான் வகை குரங்குகள் தன் சத்தத்தை உயர்த்துவதற்காக தன் கைகளை உபயோகித்துக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். போர்னியோ காடுகளில் வசிக்கும் இவற்றின் நடவடிக்கை ஒவ்வோரு முறைக்கும் வேறு வேறு விதமாக சத்தத்தை மாற்றுகின்றன.