சிவப்பு மான் (Cervus elaphus) எனப்படுவது ஒரு பெரிய மான் வகையாகும். இது ஐரோப்பா, காக்கசஸ் மலைப்பகுதிகள், ஆசிய மைனர், ஈரான் ஆகிய பகுதிகள் முழுவதும், மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை வடமேற்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோவிற்கும், துனீசியாவிற்கும் இடைப்பட்ட அட்லஸ் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரே மான் வகை இவையே ஆகும். இவை ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, பெரு, உருகுவே, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகின் பல பகுதிகளில் இவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு மான்கள் அசைபோடும் விலங்குகள் ஆகும். இவற்றின் வயிறு நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. மரபணு ஆராய்ச்சியின் படி சிவப்பு மானானது ஒரு இனமாக அல்லாமல் இனக்குழுவாக வகைப்படுத்தப்படுகிறது. இருந்தும் எத்தனை இனங்கள் இந்தக் குழுவில் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கிழக்குப் பகுதிகளை பூர்வீகமாக உடைய இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றும் சற்றே பெரிய அமெரிக்க எல்க் அல்லது வபிட்டியானது சிவப்பு மானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அது தனி இனமாக கருதப்படுகிறது. வபிட்டி உட்பட அனைத்து சிவப்பு மான்களின் மூதாதையர் ஆனது மத்திய ஆசியாவில் தோன்றி இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அது சிகா மானை ஒத்து இருந்திருக்க வேண்டும்.
ஒரு நேரத்தில் சிவப்பு மானானது ஐரோப்பிய பகுதிகளில் அரிதாக இருந்த போதிலும் அவை அழியும் தருவாயில் இருந்தது இல்லை. ஐக்கிய இராச்சியம் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுதல் மற்றும் பாதுகாக்கும் முயற்சிகள் ஆகியவற்றால் சிவப்பு மான்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் வட ஆப்பிரிக்கா போன்ற மற்ற பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
விளக்கம்
சிவப்பு மானானது நான்காவது பெரிய மானினம் ஆகும். மூஸ், எல்க் மற்றும் சாம்பார் மான் ஆகியவை முறையே முதல் மூன்று பெரிய மான் இனங்கள் ஆகும். இது ஒரு அசைபோடும் விலங்கு ஆகும். இது தனது உணவை இரண்டு நிலைகளில் உட்கொள்கிறது. ஒட்டகங்கள் ஆடுகள் மற்றும் மாடுகள் போல இது ஒரு இரட்டைப்படைக் குளம்பி. ஐரோப்பிய சிவப்பு மானுக்கு ஆசிய மற்றும் வட அமெரிக்க இனங்களுடன் ஒப்பிடும்போது நீளமான வால் உள்ளது. சிவப்பு மானின் பல்வேறு துணை இனங்களுக்கு இடையில் அவற்றின் உருவத்தில் நுட்பமான வேறுபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக உருவ அளவு மற்றும் கொம்புகளில் வேறுபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோர்சிகா மற்றும் சார்டினியா தீவுகளில் காணப்படும் சிவப்பு மான் தான் இருப்பதிலேயே சிறிய இனம் ஆகும். இருப்பதிலேயே பெரிய இனம் காஸ்பிய சிவப்பு மான் (அல்லது மரல்) ஆகும். இது காஸ்பியன் கடலுக்கு மேற்கில் ஆசியா மைனர் மற்றும் ககாசஸ் பகுதிகளில் காணப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சிவப்பு மான்கள் உருவ அளவில் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் பெரிய மான்கள் மத்திய ஐரோப்பாவின் கர்பாதியன் மலைகளில் காணப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய சிவப்பு மான் ஆனது வரலாற்று ரீதியாக உருவத்தில் பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. இதற்கு காரணம் உணவு (வேளாண் பயிர்கள்) நன்றாக கிடைப்பதே ஆகும். நியூசிலாந்து மற்றும் அர்ஜென்டினாவில் வாழும் அறிமுகப்படுத்தப்பட்ட மான்களின் வழித்தோன்றல்கள் உருவ அளவு மற்றும் கொம்பு அளவு இரண்டிலுமே பெரிதாக காணப்படுகின்றன. காஸ்பிய அல்லது கர்பாதியன் மலைகளில் காணப்படும் ஆண் சிவப்பு மான்கள் உருவ அளவில் வாபிட்டியுடன் போட்டி போடும் அளவிற்கு வளருகின்றன. பெண் சிவப்பு மான்கள் உருவ அளவில் ஆண்களை விட மிகச் சிறியதாக உள்ளன.