செம்முக மந்தி (அல்லது செம்முகக் குரங்கு) (Rhesus macaque, Macaca mulatta, அல்லது Rhesus monkey), என்பது உலகின் பழமையான குரங்கு வகைகளில் ஒன்று. இவற்றின் பரந்த பரம்பல் அடிப்படையில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தெற்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில், புல்வெளி, வறண்ட மற்றும் காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. அத்துடன் மனிதக் குடியேற்றங்களுக்கு நெருக்கமான இடங்களில் வசிக்கின்றன.
இலக்கியத்தில்
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக் (புறநானூறு 200)
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே (புறநானூறு பாடல் 378)
கடுவன் முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த செம்முக மந்தி செல்குறி கருங்கால் பொன்இணர் வேங்கைப் பூஞ்சினை (நற்றிணை 151)
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று அதவத் தீம் கனி அன்ன செம் முகத் துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க (நற்றிணை 95)
வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச் செம்முக மந்தி ஆடும் (அகநானூறு 241)
கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற் றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ வான்றேவர் கொட்கும் வழி (திணைமாலை நூற்றைம்பது)
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. (சம்பந்தர், முதல் திருமுறை)
கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான் செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி (சம்பந்தர், திருமுறை)