ஆடு (ஒலிப்பு (உதவி·தகவல்)) ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணக்கப்படி உலகம் முழுதும் 92.4 கோடி ஆடுகள் உள்ளன.
வரலாறு
மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன.
உடற்கூறியல்
ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது. சிறிய ஆடுகள் 20-27 கிலோ எடையில் இருந்து பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்றன 140 கிலோ எடை வரை வளருகின்றன.
கொம்புகள்
பெரும்பாலான ஆடுகளுக்கு இயற்கையாகவே இரண்டு கொம்புகள் உண்டு. அவற்றின் வடிவமும் அளவும் ஆட்டினத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் கொம்புகள் கெரட்டின் முதலான புரதங்களால் சூழப்பட்ட எலும்புகளால் ஆனவை. ஆட்டின் கொம்புகள் அவற்றின் பாதுகாப்புக்காவும் அவற்றின் ஆதிக்கத்தையும் எல்லையைக் காக்கவும் பயன்படுகின்றன.
செரிமானமும் பாலூட்டலும்
ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட இரைப்பையைக் கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெட்டையாடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன. எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம்.
கண்கள்
ஆடுகளுக்கு கண்ணின் கருமணியானது கிடைமட்டமாக கோடு போன்று காணப்படுகிறது.
தாடி
கிடா, பெட்டையாடு இரண்டுக்குமே தாடி உண்டு.
பயன்பாடு
பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு ஆட்டு இனங்கள்
தமிழ்நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பல்லை ஆடு என்பன.