டோலி (Dolly) என்ற பெண் இன ஆடு, படியெடுப்பு (cloning) முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கு ஆகும். இந்த வளர்ப்புச் செம்மறி ஆடு, சூலை 5, 1996 ஆண்டில் பிறந்தது. ஆறரை ஆண்டுகள் வாழ்ந்து, பெப்ரவரி 14, 2003 ஆண்டில் இறந்தது. பால்சுரப்பி என்பதனைக் குறிக்கவே, இந்த ஆட்டிற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
வாழ்க்கைச் சுருக்கம்
இசுக்கொட்லாந்திலுள்ள கால்நடைக்குரிய கல்விநிலையமான ரோசிலின் நிலையம்[note 1] இதனை உருவாக்கியுள்ளது. அதன் ஆராய்ச்சியாளர்களான இயன் வில்மட்[note 2], மற்றும் கீத் கேம்பல்[note 3] ஆகியோர் இணைந்து, இந்த வளர்ப்பு விலங்கான இச்செம்மறி ஆட்டை உருவாக்கினர். டோலியை உருவாக்குவதற்கு, 277 கருமுட்டைகள் தேவைப்பட்டன. 278வது கருமுட்டையினால் தான், டோலி பிறந்தது.
முதலில் டோலிக்கு மூட்டுவலி நோய் தாக்கம் ஏற்பட்டது. பின்பு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. எனினும், இதன் பால்மடிகளில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு, உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
தாக்கம்
இந்த ஆட்டுக்கு பெற்றோர், மூவர் உள்ளனர். மரபணுக் கருக்கள் கொடுத்த இரு ஆடுகளும், தன் கருப்பையில் வளர்த்த மற்றொரு ஆடும் சேர்ந்து மூன்று பெற்றோர் ஆகின்றனர்.
உலகில் மிகவும் பிரபலமடைந்த செம்மறியாடு இது என, பிபிசி, சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ்கள் அறிவிக்கின்றன.
படியெடுப்பு மூலம் உருவாக்கப்பட்ட டோலியின் மரபணுவைப் பயன்படுத்தி, மேலும் நான்கு ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் கெய்த் கேம்பல், அதி தொழில்நுட்ப முறைகளைக்கொண்டு, இந்த நான்கு புதிய ஆடுகளை, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, உருவாக்கியுள்ளார். இதற்கு ஒவ்வொறு ஆட்டிற்கும், தலா ஐந்து முட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளாக, இந்த தகவலை மறைத்ததால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதிலும் தொழில்நுட்ப முழுமையற்ற நிலை இருப்பதால், ஆபத்திருப்பதாக அறிவியலாளர் ஒப்புக் கொள்கின்றனர்.
வெளி இணைப்புகள்
டோலி ஆடு – விக்கிப்பீடியா
Dolly sheep – Wikipedia