நீலகிரி வரையாடு

நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.


பெயர்விளக்கம்


வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.


தமிழ் இலக்கியத்தில் வரையாடு


சீவகசிந்தாமணி


‘ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்’ என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது.


மதுரைக் கண்டராதித்தன்


மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?


நற்றிணை


வருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.


இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119)

உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? (359. குறிஞ்சி)


ஐங்குறுநூறு


நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287)


பட்டினப்பாலை


மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141)


பதிற்றுப் பத்து


ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து – பதிகம் )


பரிபாடல்


உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் (மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்-11)


உடல் அமைப்பு


காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான இமாலய காட்டாட்டை விட சற்று பெரியது. ஆண் வரையாடு, பெண் வரையாட்டைக் காட்டிலும் உடல் எடையில் இரண்டு மடங்குடையது. வளர்ந்து பருவமடைந்த வரையாட்டில் பாலியல் ஈருவத்தோற்றம் உண்டு, அதாவது ஆண் மற்றும் பெண் வரையாட்டினிடையே உடலமைப்பில் வேறுபாடு உண்டு. பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல் பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் வரையாட்டின் வயது முதிர்ந்து வருகையில் அதன் உடல்மயிரும் கருப்பாகிக்கொண்டே இருக்கும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் பிட்டத்திற்கும் முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும் (கோப்பை பார்க்கவும்). இருபாலுக்கும் தாடி இல்லை. பெண் வரையாட்டிற்கு இரண்டு காம்புகள் உண்டு, அதுவே மற்ற காட்டாடு இனங்களுக்கு நான்கு காம்புகள் உண்டு. இருபாலுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண் வரையாட்டின் கொம்பின் நீளத்தைவிட அதிகமாகும். உயர்ந்த அளவு ஆணில்44.5 செ.மீ நீளம் உள்ள கொம்புகளும் பெண்ணில் 35.6 செ. மீ நீளம் உள்ள கொம்புகளும் காணப்பட்டுள்ளது.


பல்வேறு அறிவியல் தரவுகளிலிருந்து பெறப்பட்ட ஆண் மற்றும் பெண் வரையாட்டின் உடல் அளவுகள் கீழே சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

50 கிலோ (பெண்)


110 செ.மீ (பெண்)


80 செ.மீ (பெண்)


50 கிலோ (பெண்)


53.4 கிலோ (பெண்)


வியத்திவரலாறு மற்றும் இனப்பெருக்கம்


ஆண் பாலுணர்ச்சி எழுச்சி காலத்தில் பெண் கூட்டங்களில் சேரும். ஆளுமையுடைய ஆண் புணர்வதற்கான வாய்பைப்பெறும். ஓங்கிநிற்கும் ஆண்கள் ஒன்றிற்கும் அதிகமாக இருக்கும் வேளையில், அவ்விரு ஆண்களுக்கும் இடையே சண்டை நடக்கும். இரண்டு ஆண்களும் ஒன்றிற்கொன்று துரத்தி, தன் தலை மற்றும் கொம்புகள் கொண்டு முட்டிக்கொள்ளும். சில நேரம் ஒரு ஆண் மற்றொரு ஆணை தன் கொம்புகளால் குத்திக்கொன்றுவிடும். பெரும்பாலும் தோற்கும் ஆண்கள் கூட்டத்தில் இருந்து விரட்டிவிடப்படும், சில சமயம் வென்ற ஆண் ஒப்புக்கொண்டால் கூட்டத்திலேயே வைத்துக்கொள்ளப்படும்.ஒரு ஆண் பல பெண்களோடு புணரும்.


வரையாட்டின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகத்து வரையிலான தென்மேற்கு பருவமழை காலமாகும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 178 முதல் 190 நாட்களாகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒன்று அல்லது அரிதாகவே இரண்டு குட்டி ஈன்றெடுக்கும். பெரும்பாலும் குட்டிகள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இக்காலம் குளிர் காலமென்பதால் குட்டிகளை அதிக வெப்பத்தின் தாக்கமின்றியிருக்கும். தாய், தன் குட்டியை தன் அரவணைப்பில் வைத்து மிகவும் பாதுகாக்கும். குட்டி பிறந்த பிறகு தாய்ப்பாலை பெரிதும் நம்பியிருந்தாலும், 2 முதல் 4 வாரங்களில் (கிழமைகளில்) திட உணவுகளைத் தின்னத் துவங்கும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


சூழியல்


கடல் மட்டத்திலிருந்து 1,200 – 2,600மீ உயர்ந்த மலைமுகடுகளில் உள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும். இவை 6 முதல் 150 வரை உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும். பெரும்பாலும் 11-71 உறுப்பினர்களை கொண்ட குழுக்களே அறியப்பட்டுள்ளன. பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும் அல்லது சிறு ஆண் குழுக்களாக வாழும், இனப்பெருக்க காலத்தில் பெண் குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள் வாழும், ஆண்கள் பல பெண் குழுக்களோடு கலந்து வாழும். இவை ஒன்றுக்கொன்று தகவல் தொடர்புகளை பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகியவற்றின் மூலம் பரிமாறிக்கொள்கிறது.


இவை புல்வெளிகளில் காணப்படும் புற்களையே உணவாக உண்ணும். வரையாடுகள் கூட்டமாக விடியற்காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ மேயும். அதிக வெப்பமான பகல் வேளைகளில் செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். இத்தகைய இடங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. கூட்டமாக ஓய்வு எடுக்கும்பொழுது அக்குழுவின் ஒரு உறுப்பினர் (பெரும்பாலும் பெண்), உயர்ந்த இடத்திலிருந்து காவல் காக்கும். இவ்விலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை மேலும் எதிரிகளை மிகவும் எட்டத்திலிருந்து (தொலைவிலிருந்து) கண்டுபிடிக்கக் கூடியவை. தீவாய்ப்பைக் (அபாயத்தைக்) குறிக்க சீ்ழ்க்கை ஒலி எழுப்பியோ அல்லது உரக்கக் கத்தியோ உணர்த்தும்.


வரையாடுகள் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளால் கொன்றுண்ணப்படுகின்றன.


காப்பு நிலை


வரையாட்டின் தற்பொழுது மொத்த உயிர்த்தொகை 2000 முதல் 2500 வரையில், மொத்தம் 17 இடங்களில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்டக் உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதன் மொத்த உயிர்த்தொகையில் சுமார் 1000 எண்ணிக்கையிலானவை கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார் 300 எண்ணிக்கையிலானவை ஆனைமலைப் பகுதிகளிலும் மற்றும் ஏனையவை இன்னபிற இடங்களிலும் காணப்படுகிறது. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர காடுகளில் கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் வரையடுகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் வரையாடிகளின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.


காணப்படும் இடங்கள்


 • இரவிக்குளம் தேசிய பூங்கா (கேரளா)

 • ஆனைமலை (தமிழ் நாடு)

 • தேனி – மேகமலை (தமிழ் நாடு)

 • முக்கூர்த்தி மலைகள் (தமிழ் நாடு)

 • நீலகிரி மலைகள் (தமிழ் நாடு)

 • அகத்திய மலைகள் (கேரளா)

 • ஹை கில்ஸ், மூணார் (கேரளா)

 • வால்பாறை (தமிழ் நாடு)

 • ஆழியார் மலைகள் (தமிழ் நாடு)

 • சிறீவல்லிப்புத்துர் (தமிழ் நாடு)

 • வெளி இணைப்புகள்

  நீலகிரி வரையாடு – விக்கிப்பீடியா

  Nilgiri tahr – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *