ஆசியச் சாம்பல் மூஞ்சூறு (Asian gray shrew)(குரோசிடுரா அட்டெனுவாட்டா) என்பது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டியாகும். இது பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது . இப்பகுதியில் காணப்படும் பொதுவான உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. இதனைப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புக்கான சங்கம் தீவாய்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது.
விளக்கம்
ஆசியச் சாம்பல் மூஞ்சூறுவின் தலை மற்றும் உடல் நீளம் 66 முதல் 89 மி.மீ. வரையிலும் வாலின் நீளமானது பொதுவாக இந்த நீளத்தில் 60% முதல் 70% வரை இருக்கும். இதன் எடை 6 முதல் 12 g (0.2 முதல் 0.4 oz) ஆகும். தலை மற்றும் முதுகு புறத்தில் காணப்படும் உரோமங்கள் அடர் சாம்பல் முதல் புகை-பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிப்பகுதிகள் அடர் சாம்பல் நிறத்திலும் வாலானது அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
பரவலும் வாழ்விடமும்
ஆசியச் சாம்பல் மூஞ்சூறு தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இது கம்போடியா, தென்கிழக்கு சீனா, வட இந்தியா, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் காணப்படுகிறது. இதன் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 m (10,000 ft) உயரம் உள்ளப் பகுதிகளில் காணப்படும். இது தாழ் நிலம் மற்றும் மாண்டேன் மழைக்காடுகள், மூங்கில் காடு, புதர் நிலம், காடுகளை ஒட்டிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் வாழ்கிறது.
சூழலியல்
மூஞ்சூறு துணைக் குடும்பமான குரோகுரினாவின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, ஆசியச் சாம்பல் மூஞ்சூறும் பூச்சிகளை உண்ணுகின்றது. நிலப்பரப்பில் வாழும் இந்த மூஞ்சூறு பகல் மற்றும் இரவு என முழு நேரமும் செயலில் உள்ளது. இதன் இயற்கை வரலாறு அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை. இவை நான்கு முதல் ஐந்து குட்டிகளை ஈணுகின்றன.
நிலை
ஆசியச் சாம்பல் மூஞ்சூறு இதன் பரம்பலின் பல பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் சில இடங்களில், வாழ்விட அழிவால் பாதிக்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட இரைகெளவல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இது பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகின்றது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதன் நிலையினை “தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்” என்று மதிப்பிட்டுள்ளது.