பிராம்பிள் கே எலி என்பது ஆத்திரேலியாவின் வட கோடியில் உள்ள பிராம்பிள் கே என்னும் முனைப்பகுதியில் வாழ்ந்து வந்த எலியாகும். இது பெருந்தட்பவெப்ப மாற்றத்தால் அண்மையில் முற்றாய் அற்றுப்போன முதல் உயிரினம். இதன் உயிரியல் பெயர் மெலோமிசு உரூபிக்கோல ((Melomys rubicola) என்பதாகும். இந்த கொறிணி மற்ற வகையான எலிகள் அடங்கிய முரிடீ (Muridae) என்னும் குடும்பத்தில், முரினீ (Murinae) என்னும் உட்குடும்பத்தில் உள்ள ஓர் உயிரினம். இந்த பிராம்பிள் எலியானது யார்க்கு முனை எலி (Cape York melomys) என்னும் எலி இனத்துக்கு நெருக்கமானது எனினும், இதன் புரதப்பொருள் சற்று வேறானதும் இதன் வால் செதில்கள் துருத்திக்கொண்டிருப்பதால் சற்று சொரசொரப்பு கூடுதலானதும் ஆகும். வயலில் வளை உருவாக்கி வாழ்ந்து வந்தன.
ஆத்திரேலியாவில் மிகவும் தனித்துவாழ்ந்த பாலூட்டி இனம் இந்த பிராம்பிள் எலி ஆகும். பிராம்பிள் கே என்னும் இடத்தில் சிறு பகுதியில் (340 by 150 மீட்டர்கள் (1,120 ft × 490 ft)) சிறு எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வந்த இனம். கே என்னும் ஆங்கிலச் சொல் தாழ்ந்த மட்டத்தில் உள்ள சிறு தீவுக்கான பெயர். இப்பெயர் அமெரிக்கப் பழங்குடி மொழிகளுன் ஒன்றான தையினோ என்னும் மொழிவழி எசுப்பானிய மொழிவழியாக ஆங்கிலத்தில் நுழைந்த சொல். இந்த எலி உயிரியலாளர்கள் தேடியும் 2007 முதல் காணப்படவில்லை. இது முற்றாக அற்றுப்போயிருக்கலாம் என்று கருதினர்
2016 இல குயின்சுலாந்து அரசின் சூழலியன் ஆய்வாளர்கள் இந்த எலி இனம் முற்றாய் அற்றுப்போய்விட்டது என்று அறிக்கை விடுத்தனர்.குறிப்பாக இதுவே மாந்தர்களின் செயற்பாடுகளால் ஏற்பட்ட பெருந்தட்பவெப்ப மாற்றத்தால் நிகழ்ந்த முதல் உயிரினம் அற்றுப்போகல் நிகழ்ச்சி என்றும் கூறினர். எனினும் இது உயிரோடிருக்க சிறு வாப்புள்ளதாகச் சிலர் கருதினர். அழிந்துபோயிருக்கும் வாய்ப்புள்ள பட்டியலில் (IUCN Red listing) சேர்த்திருந்தனர் “
பிப்பிரவரி 18, 2019 இல் ஆத்திரேலிய அரசு, இந்த பிராம்பிள் எலியானது முற்றாக அற்றுப்போன உயிரினம் என்று அறிவித்துள்ளது.
வெளி இணைப்புகள்
பிராம்பிள் கே எலி – விக்கிப்பீடியா