நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை (Herpestes urva) ஒரு கீரிப்பிள்ளை இனமாகும். வடகிழக்கு இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா தெற்கு சீனா, தைவான் வரை இந்த இனம் பரவியுள்ளது . ஐ.யூ.சி.என் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.
1836 இல் பிரையன் ஹாட்டன் ஹோட்சொன் முதன்முதலில் இந்த வகையைப் பற்றி விவரித்தார். மத்திய நேபால் பகுதியில் இது ஊர்வா என்று அழைக்கப்படுகிறது.
பண்புகள்
பக்கங்களில் சாம்பல் நிறத்துடனும், கழுத்து, மார்பு, வயிறு, கால்கள் என்பன பழுப்பு நிறத்துடனும் உள்ளன. கன்னத்தில் இருந்து தோட்பட்டை வரை கழுத்தின் பக்கங்களில் ஒரு பரந்த வெள்ளை நிறக் கோடு உள்ளது. இதன் தலையின் மேற்புறத்தில் வெள்ளைப் புள்ளிகள் கொண்டது, அதன் கன்னம் வெண்மையாகவும் தொண்டை சாம்பல் நிறத்திலும் உள்ளது. கருவிழி மஞ்சள் நிறமாகும். குட்டையான வட்டமான காதுகள். தலையில் இருந்து உடல் நீளம் 47.7 முதல் 55.8 cm (18.8 முதல் 22.0 in) நீண்ட புதர் வால் நீளம் 28 முதல் 34 cm (11 முதல் 13 in). எடை 1.1 முதல் 2.5 kg (2.4 முதல் 5.5 lb).
பரம்பலும் வாழிடமும்
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை வடகிழக்கு இந்தியா , வட மியான்மார் , தாய்லாந்து , மலேசியத் தீபகற்பம் , லாவோஸ் , கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. வங்கதேசத்தில் அரிதாகக் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,800 m (5,900 ft) உயரத்தில் உள்ளது.
சூழலும் நடத்தையும்
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளைகள் நான்கு விலங்குகள் வரை உள்ள குழுக்களாக காணப்படுகின்றன. காலையிலும் மாலை வேளைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கும். நீச்சல், ஆற்றங்கரையோர வேட்டையில் சிறப்பாகச் செயற்படுகின்றன.
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை என்ற பொதுப் பெயரைக் கொண்டிருப்பினும், அவை உணவாக நண்டுகளை மட்டுமே உண்பதில்லை, அதனுடன் மீன், நத்தைகள், தவளைகள், கொறிணிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் போன்றவற்றைக் கூட உண்கின்றன.