பொன்னிற மரநாய் (Paradoxurus zeylonensis) என்பது புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றது. புனுகுப்பூனை இனங்களில் பருமனில் மிகச் சிறிய இனமொன்றாகிய இதன் உடல் பொன்னிறம் கலந்த பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் பிடரி மயிர் தோட்கட்டிலிருந்து தலை நோக்கி கீழிருந்து மேலாக வளரும்.
அடர்ந்த காடுகளில் வாழும் இவ்வுயிரினம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. பொன் மரநாய்கள் பழங்கள், பூச்சிகள், பறவைகள், தவளைகள், பல்லிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதாகக் கருதப்படுகிறது. சில வேளைகளில் கிராமங்களில் ஊடுருவும் இது கோழிகளைத் தூக்கிச் செல்வதுண்டு.
பண்பாட்டுத் தொடர்பு
இலங்கையில் இவ்விலங்கு சிங்களத்தில் பனி உங்குடுவா, சப்புமல் கலவெத்தா, ரன்ஃகோத்தம்புவா/ஃகோத்தம்புவா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. எனினும், ஃகோத்தம்புவா என்ற சொல் உருவத்தில் இதனை ஒத்ததாகக் காணப்படும் பல இன விலங்குகளையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. உண்மையில் ஃகோத்தம்புவா என்ற சொல் செங்கீரிப்பிள்ளையைக் (Herpestes smithii) குறிக்கப் பயன்படுவதாகும். இதனைக் குறிக்கப் பயன்படும் பெயர்களில் ஏற்படும் இக்குழப்பம் இதன் உருவமும் நிறமும் வேறு பல இனங்களை ஒத்திருப்பதனாலேயே ஏற்படுகிறது. சிங்களத்தில் பொன் மரநாய், ஆசிய மரநாய் என்பவற்றை கலவெத்தா என அழைக்கப்படுகிறது.
பொன் மரநாய் இலங்கைக்குத் தனிச் சிறப்பான விலங்கு என்பதால் இதனைச் சிறப்பிக்க இலங்கை அஞ்சற் திணைக்களம் இதன் படம் பொறித்த மூன்று ரூபாய் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. அம்முத்திரையில் இதன் பெயர் கோல்டன் பால்ம் கெட் (Golden Palm Cat) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
பொன்னிற மரநாய் – விக்கிப்பீடியா