கழுதைப்புலி

கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.


பெயர்கள்


கழுதைப்புலிக்கு கடுவாய்,என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி,கழுதைக்குறத்தி, வங்கு என்ற பிற பெயர்களும் வழங்கி வந்துள்ளன.


உடல் அமைப்பு


கழுதைப்புலி் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும். இதன் உடல் முழுவதும் கறுப்பு நிறத்திலான 5 முதல் 9 வரை அடர்த்தியான வரிகள் காணப்படும். இதன் முகமுன்பகுதி, பிடரி மயிர்கள், தோள்பட்டை மற்றும் காதுகள் கறுப்பு நிறத்திலானவை. இவ்விலங்கு அச்சத்திலோ அல்லது சினத்திலோ அல்லது மற்ற விலங்கை பயமுறுத்தவோ தன் உடல் மயிர்களை செங்குத்தாக நிமிர்த்தும் (“சிலிர்க்கும்”), அப்பொழுது இதன் உருவம் இயல்பாக எப்பொழுதும் உள்ள அளவைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை பெரிதாக காணப்படும். இந்நடத்தை மற்ற கழுதைப்புலிகளை எதிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது.


கழுத்திற்கு கீழ் பகுதியில் கறுப்பு நிறத்திலான தொண்டை தோல்திட்டு ஒன்று காணப்படும். இதன் கால்கள் மிகவும் நீளமானவை. இதன் மயிர் அடர்த்தியான வால்கள் பின்னங்கள் வரை நீண்டவை. இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் 1.2 முதல் 1.45 மீட்டர் உயரமும், 26 முதல் 41 கிலோ எடையும் கொண்டவை. ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகளின் உடல் அமைப்பில் வேறுபாடுகள் கிடையாது.


உள்சிற்றினங்கள்


கழுதைப்புலிகள் Hyaena hyaena என்ற சிற்றினத்தில் 5 உள்சிற்றினங்கள் உண்டு. இவ் உள்சிற்றினங்கள், மயிற்போர்வை மற்றும் மற்ற உடல் அளவுகளால் வேற்றுமைப்படுத்தப்படுகின்றது.


உள்சிற்றினங்களும் அவை வாழும் பகுதிகளும்:


 • Hyaena hyaena syriaca; மத்திய கிழக்கு

 • Hyaena hyaena sultana; அரபு நாடுகள்

 • Hyaena hyaena dubbah; வடகிழக்கு ஆப்பிரிக்கா

 • Hyaena hyaena barbara (de Blainville, 1844); வடமேற்கு ஆப்பிரிக்கா

 • வரிக் கழுதைப்புலி (லின்னேயஸ், 1758); இந்தியா

 • பரவலும் வாழிடமும்


  கழுதைப்புலிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியக் கண்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது. கழுதைப்புலிகள் ஐரோப்பியக் கண்டத்திலிருந்து அற்றுப்போய்விட்டது என்றாலும் அனடோலியா மற்றும் துருக்கியில் அரிதாகக் காணப்படுகிறது. இவ்விலங்கு புதர் மற்றும் உட்காடுகளை தன் வாழ்விடமாகக் கொண்டது.


  சூழியல்


  இவை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டிருப்பினும் பெரும்பாலும் பிற கொன்றுண்ணிகள் விட்டுச்செல்லும் எச்சங்களையே தின்னும், மேலும் சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும். தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்புலிகளின் உணவைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சிகள், இவை புள்ளி மான், முயல் மற்றும் கால்நடைகளை உண்பதாக தெரிவிக்கின்றது. சில நேரங்களில் கூட்டமாக வேட்டையாடும் .


  இனப்பெருக்கம்


  கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.


  காப்பு நிலை


  இந்தியாவில் கழுதைப்புலிகளின் உயிர்தொகையை பற்றிய கணக்குகள் ஏதுமில்லை. கழுதைப்புலிகள் மனித பிணக்குகளே இவ்விலங்கின் வாழ்விற்கு மிகவும் அபாயமான அச்சுறுத்தலாகும். இவ்விலங்கு காடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளிலுள்ள கால்நடைகளை தாக்குவதால், இவை மனிதர்களால் கொல்லப்படுகின்றன. மேலும் இவ்விலங்கின் உடலுறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையால், இவை சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்படுகின்றன. இதன் வாழ்விட சீர்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.


  இவை இந்தியாவிற் காணப்படும் இடங்கள்


  முதுமலை புலிகள் காப்பகம் (தமிழ் நாடு)


  சத்தியமங்கலம் காடுகள் (தமிழ் நாடு)


  சிகூர் சமவெளி (தமிழ் நாடு)


  நீலகிரி வனச்சராகம்-வடக்கு பகுதி (தமிழ் நாடு)


  களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் (தமிழ் நாடு) – இங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது


  பந்திப்பூர் புலிகள் காப்பகம் (கர்நாடகா)


  சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயம் (மத்தியப் பிரதேசம்)


  வெலவாடார் தேசிய பூங்கா (குஜராத்)


  வெளி இணைப்புகள்

  கழுதைப்புலி – விக்கிப்பீடியா

  Hyena – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.