கங்காரு எலி (Kangaroo rat) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வளரக்கூடிய சிறிய வகைக் கொறிணி ஆகும். இவற்றின் பொதுவான பெயர் இவைகளின் இருகால் வடிவத்தில் இருந்து பெறப்பட்டது. எனினும் இவை அவுஸ்திரேலிய உலர் சமவெளிப் பகுதிக்குரிய பெரிய கங்காரு போன்று இல்லை. எனினும் பார்க்க எலி போன்று இருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. கங்காரு எலிகளை அரிசோனா மற்றும் கொலராடோ பகுதிகளிலும் காணலாம். உலகெங்கும் 22 வகையான கங்காரு எலிகள் வாழ்கின்றன. அவற்றுள் மிகவும் பெரியது டிப்போடொமைசு இனம் ஆகும். மழைவீழ்ச்சி மற்றும் ஈரப்பதம் குறைந்த இடங்களே இவற்றின் வாழிடமாக உள்ளது.
விபரம்
பொதுவாக கங்காரு எலிகளின் நீளம் 10 தொடக்கம் 12 சென்ரி மீற்றர்கள் ஆகும், அத்துடன் இவற்றின் நிறை 35 தொடக்கம் 180 கிராம்கள் ஆகும். இவற்றின் வால் உடலையும், தலையையும் பார்க்க நீளமானதாகும். அத்துடன் கங்காரு எலிகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயம் உள்ளது, அதாவது இவற்றின் கன்னத்திலே உரோமத்துடன் கூடிய சிறுபைகள் (cheek pouches) காணப்படுகின்றன. இப்பைகள் உணவை சேமித்துவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இடம்பெயர்வு
கங்காரு எலிகள் இருகால் நகர்வு முறையையே பின்பற்றுகின்றன. இவை அடிக்கடி ஆறு அடி நீளம் பாயக்கூடியவை. இவை பாய்ச்சல்கள் மூலம் தாம் சென்றுகொண்டிருக்கும் திசையை திடீரென மாற்றக்கூடியவை.