மூங்கில் அணத்தான்

மூங்கில் அணத்தான் அல்லது மூங்கணத்தான் என்பது தென் இந்தியாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படும் ஒருவகை கொறிணி ஆகும். அணத்தானா பேரினத்தின் ஒரே சிற்றினம் இதுவாகும். இதன் உயிரியல் பெயர் அணத்தானா எல்லியாட்டி என்பதாகும். “அணத்தானா” என்ற பேரினப்பெயர் மூங்கில் அணத்தான் என்ற இதன் தமிழ்ப்பெயரிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப் பெயரானது சர் வால்டெர் எல்லியாட் என்ற மெட்ராஸில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.


வாழிடம்


இவ்விலங்கு இந்தியத் துணைக்கண்டத்தில் கங்கையாற்றிற்குத் தெற்கே காணப்படுகிறது. இவற்றின் மூன்று சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பிலிகிரிரங்கன், சேர்வராயன் மலை மற்றும் தென்னிந்தியாவின் பிற குன்றுகளில் காணப்படும் அ. எ. எலியாட்டி, மத்தியப் பிரதேசம் மற்றும் ராய்ப்பூரில் காணப்படும் அ. எ. பல்லிடா, மும்பை அருகிலுள்ள சாத்புரா மலை மற்றும் தாங் மலைகளில் காணப்படும் அ. எ. ராட்டோனி ஆகியவை அச்சிற்றினங்கள். இவற்றின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இல்லை.


உடலமைப்பு


இது 16 செ.மீ. நீளம் முதல் 18.5 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் வால் நீளம் 16.5 செ.மீ முதல் 19.5 செ.மீ. வரை இருக்கும். இதன் பல்வரிசை அறிவியல் குறியீட்டில் “I 2/3 C 1/1 P 3/3 M 3/3” என்பதாகும். இதன் பல் அமைப்பு தாவர மற்றும் விலங்கு இரைகளை உண்பதற்கு ஏற்றதாகும்.


நடத்தை


இவ்வகை மூங்கணத்தான், குறிப்பிடத்தக்க வகையில் மரவாழிகளாக இல்லை. மாறாக இவை கூடுதல் நேரம் தரையிலோ அல்லது பாறைகளின் மீது தவழ்ந்தேறியோ பூச்சிகளையும் விதைகளையும் தேடியே செலவிடுகின்றன. இவற்றின் வால் நிறம் வடிவம் மற்றும் இவை நடந்து செல்லும்போது வால் மேல்நோக்கி வளையும் பாங்கு ஆகியவற்றின் மூலம் இவற்றை அணில்களிடம் இருந்து எளிதில் வேறுபடுத்தி அடையாளம் காணலாம்.


இவை தாழ்ந்த கிளைகளின் மீது ஏறி தலைமுதலாக சறுக்கும் வழக்கமுடையவை. இப்பழக்கம் தனது வாசனையை விடுக்கவும் கிளைகளில் விடப்பட்டுள்ள மற்ற அணத்தான்களின் வாசனையை நுகர்வதற்குமாக இருக்கலாம். இவை சார்ந்துள்ள உயிரியல் குடும்பத்தில் தொண்டைப் பகுதியில் வாசனைப்பொருள் சுரப்பிகள் பொதுவாக காணப்படுபவை.


வெளி இணைப்புகள்

மூங்கில் அணத்தான் – விக்கிப்பீடியா

Madras treeshrew – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.