மலபார் புனுகுப் பூனை

மலபார் புனுகு பூனை (Viverra civettina) என்பது இந்தியாவில் வாழும் புனுகு பூனை இனங்களில் மிக அரிய விலங்கினமாகும். இதனை மலையாளத்தில் சாவாதி வெருகு – ജാവാദി വെരുകു് என்றும் கன்னடத்தில் சிரதே பெக்கு என்றும் அழைப்பர். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் தனிச் சிறப்பான மலபார் புனுகு பூனைகள் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் கேரள, கர்னாடக மாநிலங்களின் தாழ்நிலக் கரையோரப் பகுதிகளில் நிறைந்து காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இவ்வினம் அருகிவிட்ட போதும் 1960கள் வரையில் இவ்வினத்திலிருந்து புனுகு பெறப்பட்டது. 1990 இல் தென் மலபார் பகுதியில் இவை சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்தன. 1999 இல் இவ்வினத்தில் வெறுமனே 250க்கும் குறைவான விலங்குகளே இயலிடத்தில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டது.


தோற்றம்


விலங்கியலறிஞர் சிலர் மலபார் புனுகு பூனையை Viverra megaspila civettina என்று பெரும்புள்ளிப் புனுகு பூனையின் (Viverra megaspila) துணையினமொன்றாக வகைப்படுத்துகின்றனர். பெரும்புள்ளிப் புனுகு பூனை பற்றிய தரவுகளின் அடிப்படையில் சிலர் இதனை அதே இனமாகவே இருப்பதாகக் கூறுகின்றனர். இது கிட்டத்தட்ட 8 – 9 கிகி (18 – 20 இறாத்தல்) நிறையுடையதாகும். மங்கிய சாம்பல் நிறத் தோலினையுடைய இதன் உடலில் தெளிவற்றுக் காணப்படும் புள்ளிகள் கோடுகள் போன்று தோற்றமளிக்கும். இதனுடன் சேர்ந்தாற் போல வாழும் மற்றொரு விலங்கினமான சிறிய இந்திய புனுகு பூனையிலிருந்து (Viverricula indica) இதனை வேறாக்கிக் காட்டும் ஏனைய இயல்புகள் இதனுடைய உடற் பருமனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறியதாக உள்ள வால், இதன் முதுகுப் புறமாக உள்ள சிலிர்த்து நிற்கும் கருமயிர்கள் என்பனவாகும். அவ்வாறான கருமயிர்கள் புனுகி பேரினத்தில் மொத்தமாக உள்ள நான்கு இனங்களிலும் பொதுவாகக் காணப்படும். மக்கள் சிறிய இந்திய புனுகு பூனைகளை மலபார் புனுகு பூனைகளென அடிக்கடி தவறாகக் கருதுவதுண்டு.


வாழிடம்


மலபார் புனுகு பூனையின் சரியான வாழிடம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்குக் கீழாக உள்ள மலபார் கரை ஈரலிப்பான காடுகளாகும். இவ்வினம் அங்கு காடடர்ந்த சமவெளிகளிலும் அவற்றை அண்டிய மலைச் சாரல்களிலும் வாழ்ந்தது. ஒரு காலத்தில் இவை மலபார் மற்றும் திருவாங்கூரின் கரையோர மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்தன. மிகக் கூடுதலாக நடந்த காடழிப்பின் காரணமாக மலபார் காடுகள் ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளாக மாறிவிட்டன. இன்றைய நிலையில், தப்பி வாழும் மலபார் புனுகு பூனைகளுக்குக் காப்பகங்களாக முந்திரிப் பயிர்ச்செய்கை நிலங்கள் காணப்படுகின்றன. அவற்றிலேயே இவற்றில் மீதமுள்ளவை வாழ்வதாகக் கருதப்படுகிறது. இறப்பர் பயிர்ச்செய்கைக்காக நடக்கும் பெருமளவு காடழிப்பும் இவற்றுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.


நடத்தை


இரவில் நடமாடும் ஊனுண்ணி விலங்கான இது தனித்து வாழக்கூடியதும் சண்டையிடும் இயல்பு கொண்டதும் ஆகும். தரையிலேயே உணவு தேடும் இது ஒரு போதும் மரங்களில் காணப்பட்டதில்லை. சிறிய முலையூட்டிகள், ஊர்வன, ஈரூடகவாழிகள், மீன்கள், பறவைகளின் முட்டைகள் மற்றும் சில காய்கறி வகைகளை இது உணவாகக் கொள்ளும். நறுமண எண்ணெய் தயாரிப்பு, கீழைநாட்டு மருத்துவம், பீடிகளுக்கு மணமூட்டல் போன்ற தேவைகளுக்கென இதன் குதச் சுரப்பிகளிலிருந்து வெளியாகும் புனுகைப் பெற்றுக்கொள்வதற்காக இதனைப் பிடித்து வளர்த்தல் மிகக் கடினமானதாகும்.


அச்சுறுத்தல்


ஆங்காங்கே சிதறி வாழும் மலபார் புனுகு பூனைகள் எதிர் நோக்கும் முதன்மையான அச்சுறுத்தல்களில் அவற்றின் வாழிடங்களான காடுகள் பணப் பயிர்களுக்காக அழிக்கப்படுவதும் தவறுதலாக நாய்களை விட்டு வேட்டையாடப்படுவதும் ஆகும். பறவைப் பண்ணைகளைத் தாக்குவனவாகக் கருதப்படும் இவை தென்படும்போது பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

மலபார் புனுகுப் பூனை – விக்கிப்பீடியா

Malabar large-spotted civet – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *