கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன.
பண்புகள்
34 சிற்றினங்களை உள்ளட்டக்கிய கீரிகளின் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் தவிர்த்து) இருக்கிறது. 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில இனங்களைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில இனங்கள் குழுவாக வாழந்து இரையைப் பகிர்ந்துண்டு வாழ்கின்றன.
உணவு
பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன. இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொல்லும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது.
மனிதனும் கீரியும்
இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு.