தரை நாய் எலி

தரை நாய் (Prairie dog) என்பது வட அமெரிக்காவில் கனடா மற்றும் மெக்சிகோ பகுதியில் பிரெய்ரி என்ற நெடும் பரப்புப் புல்வெளியில் வாழும் எலி வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும். இதனை பிரெய்ரி நாய் என்றும் அழைப்பர். இதற்கு நாய் எனப் பெயர் இருப்பினும் இது நாய் இனத்திலிருந்து உருவத்திலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் வேறுபட்டது.


உடலமைப்பு


தரை நாயின் முகம் , பிளவுபட்ட வாய், மூக்கு, கண் ஆகியவை மிகப்பெரிய அணில் போல இருக்கும். முகத்தில் பூனையைப் போல மீசை மயிர்கள் வாயருகில் இருக்கும். உடல் வெளிறிய செந்நிற முடிகளால் ஆனது.அது கீரிப்பிள்ளையைப் போல் இருக்கும். குட்டையான கால்களையும் தடிமனான வாலையும் பெற்றிருக்கும். அதன் கால்களில் நீளமான விரல்கள் இருக்கும்.


உணவு


தரை நாய் ஒரு தாவர உண்ணி ஆகும். புல், சிலவகைப் பூக்கள், விதைகள் ஆகியவற்றை இது உண்ணும். நீளமான புற்களைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு அதைத் தன் வாயில் வைத்துத் தின்னும். பிரெய்ரி புல்வெளி மிகப் பரந்து இருப்பதால் தரைநாய்க்கு உணவுப் பற்றாக்குறை என்பது இல்லை. மேலும் அது உண்ணும் புல்லில் உள்ள உயிர்ச்சத்தையும் நீர்ச்சத்தையும் அது பயன் படுத்திக்கொள்வதால் தண்ணீரைத் தேடி அது செல்வதில்லை.


வாழிடம்


தரை நாயானது எலியைப் போல வளைகளை அமைத்து அதில் வாழும். அதன் கூர்மையான விரல்களால் தரையைத் தோண்டி வளையை அமைக்கும். அது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கும். குறுக்கும் நெடுக்கும் இருக்கும் நகரத்துத் தெருச் சந்துகளைப்போல அது அமைக்கப்பட்டிருக்கும். வளை தோண்டும் போது தன் முகத்தினைக் கைகள் போலப் பயன்படுத்தி முகத்தால் மண்ணைத் தள்ளி இடத்தினை அகலப்படுத்திக் கொள்ளும். பிரெய்ரிப் புல்வகை நீண்டு வளர்வதால், தரை நாயின் வளைக்கு அப்புல்வகையே இயற்கைப் பாதுகாப்பாக அமையும். இவ்வளைகள் கால நிலைக்கேற்ப வெப்பத்தினை சமப்படுத்தும் வகையில் அமைக்கப்படும். குளிர்காலத்தில் இதனுள் 5-10 °செ.வெப்பநிலையும் கோடையில் 15-25 °செ. வெப்ப நிலையும் நிலவுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளைகள் மழை, வெள்ளம்போன்ற இயற்கை சீரழிவுகளால் பாதிக்காத வண்ணம் நல்ல காற்றோட்டத்துடன் காணப்படுகிறது.


வாழ்க்கை முறை


பிரெய்ரி நாய்கள் கூட்டங்கூட்டமாய் வாழ்கின்றன. பெற்றோர் நாய்கள் உணவு தேடி வெளியே செல்கின்றன. அப்போது குட்டிகள் தூரமாகச் செல்லாமல் வளையின் அருகிலேயே விளையாடி மகிழும். கோடைக்காலத்தில் இந்த நாய்களுக்குக் கிடைக்கும் புல் உணவு குளிர் காலத்தில் கிடைப்பதில்லை. பிரெய்ரி புல்வெளிப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படும். எனவே குளிர் காலம் வருவதை உணர்ந்து இந்த நாய்கள் பனி வரும் முன்னரே புல்லைக் கடித்து சேமித்து தம் வளைக்குள் வைத்துக் கொள்ளும். உணவாகப் பயன்படும் அந்தப் புற்கள் படுக்கையாகவும் பயன்படும்.
உணவு கிடைக்காத குளிர்காலங்களில் தரை நாய் நீள் உறக்கம் மேற்கொள்ளும். அவை அப்போது தமது வளைக்குள் வசதியாகப் படுத்துக்கொள்கின்றன. நீளுறக்கம் கொள்வதற்கு முன் இனப்பெருக்கத்திற்குரிய இணைவை அது மேற்கொள்ளும். நீள் உறக்கம் கொள்ளும் போது அதன் உடலில் உள்ள கொழுப்பு, உணவு உண்ணாத நிலையை ஈடு செய்து உயிர் காக்க உதவும்.
தரை நாயின் குட்டிகளும் தாய் விலங்குகளும் அன்பாகப் பழகும். குழந்தை தாயின் முகத்தில் தன் வாய் வைக்கும். இதன் மூலம் விளையாட்டுத்தனத்தை மட்டுமின்றி தனது அன்பபையும் தெரிவிக்கும்.


செய்தி பரப்பும் முறை


தரை நாய்கள் தங்களுக்குள் செய்தி பரப்பும் முறை மிகவும் வினோதமானதாகும். இது தனது பின்கால்ளைத் தரையில் ஊன்றி எழுந்து நிற்கும். இவைகள் கூட்டமாக வாழ்வதால் பெரும்பாலும் ஆணும் பெண்ணுமாக எழுந்து நிற்கின்றன. சற்று தூரத்தில் பகை உயிரி ஒன்று வருவது இவற்றின் கண்களில் தெரிந்தால், உடனே இவை எச்சரிக்கைக் குரலை எழுப்புகின்றன. இவ்வோசை அணிலின் குரல் போலவே இருக்கும். அந்த ஒலி, சற்று தொலைவில் உள்ள மற்றொரு தரைநாயின் காதில் விழுகிறது. அந்த நாயும் எழுந்து நின்று அதேவகை ஒலியை எழுப்பிக் கத்துகிறது. அதைக் கேட்கும் மற்றொரு நாயும் இவ்வாறே செய்கிறது. இப்படியே அந்த வட்டாரத்தில் எச்சரிக்கை பரப்பப்படுகிறது.


பகை


இந்த நாயினத்திற்கு மூன்று விதமான பகைகள் உள்ளன. இவற்றின் உடலில் ஒருவித ஒட்டுண்ணிகள் வாழ்கின்றன. இவற்றை தரை நாய் தனது வாயால் நீவி அகற்றும். பிரெய்ரிப் புல்வெளிகளில் வாழும் பைசன் எனப்படும் காட்டெருதுகள் வாழ்கின்றன. அவற்றின் உடலில் ஒரு வகை உண்ணிகள் உள்ளன. அவற்றை வெளியேற்றுவதற்காக, அந்தக் காட்டெருமைகள் தரையில் படுத்துப் புரளும் அப்போது அது புரளக்கூடிய இடத்தின் அடிப்பாகத்தில் தரை நாயின் வளை இருந்தால் அவை அழுந்தி நாசமாகின்றன. அதனுள் இருக்கும் சிறிய குட்டிகளும் நசுங்கி இறந்துவிடுகின்றன. பிரெய்ரிப் புல்வெளியில் தங்கக்கழுகு (Golden eagle) என்ற பறவைகளும், ஆந்தைகளும் வாழ்கின்றன. இவை ஏமாந்த நேரத்தில் வளையின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் தரை நாயின் குட்டிகளைத் தூக்கிச் சென்று விடுகின்றன. இவை தவிர அங்கு வாழும் குள்ள நரிகளும் தரை நாய்களுக்குப் பகையாகும்.

வெளி இணைப்புகள்

தரை நாய் – விக்கிப்பீடியா

Prairie dog – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.