துரும்பன் பூனை (Prionailurus rubiginosus) பூனைக் குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களில் ஒன்றாகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே அறியப்பட்ட விலங்காக இருந்தது. 2012-ஆம் ஆண்டில் நேப்பாளத்தின் மேற்குத் தெராய் பகுதியில் இந்தப் பூனை இனத்தைக் கண்டுள்ளனர். 2016-ஆம் ஆண்டுமுதல் துரும்பன் பூனைகளின் உலகளாவிய தொகை அச்சுறு நிலையை அண்மித்துள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூனைகளின் வாழிடங்களான இலையுதிர் காடுகள் அருகிவருவதாலும் பிளவுபடுவதாலும் இவை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
உடலமைப்பு
துரும்பன் பூனைகள் ஆசியக் கண்டத்தின் ஆகச்சிறிய காட்டுப்பூனைகள் ஆவன. உலகிலேயே மிகச்சிறிய காட்டுப்பூனை இனமான கரும்பாதப் பூனைகளை அடுத்து மிகச்சிறிய பூனைகள் துரும்பன் பூனைகளே. துரும்பன் பூனை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 35 முதல் 48 செ.மீ. (14 முதல் 19 இஞ்.) நீளம் இருக்கும். இப்பூனைகளுடைய வாலின் நீளம் கிட்டத்தட்ட 15 முதல் 30 செ.மீ. (5.9 முதல் 11.8 இஞ்.) இருக்கும். இவற்றின் எடை வெறுமனே 0.9 முதல் 1.6 கிலோ (2.0 முதல் 3.5 பவு.) மட்டுமே இருக்கும்.
துரும்பன் பூனைகளின் தோலின் மேற்புறத்தில் இருக்கும் மயிர் கிட்டத்தட்ட உடல் முழுவதும் சாம்பல் நிறமாகவும், பின்புறத்திலும் விலாமடிப்புகளிலும் துரும்புச் சிவப்பு நிறத்திலான புள்ளிகளுடனும் இருக்கும். இவற்றின் உடலில் பாதிநீளம் இருக்கும் வால் அடர்நிறமாகவும் தடித்தும் இருக்கும். வாலின் மீதான புள்ளிகள் தெளிவற்று இருக்கின்றன. இந்தப் பூனைகளின் தலையின் இருபுறத்திலும் ஆறு அடர்நிற வரிக்கீற்றுகள் இருக்கின்றன. அக்கோடுகள் செவுள்ப் பகுதியிலும் நெற்றிப்பகுதியிலும் தொடர்ந்து இருக்கின்றன.
அறிவியல் வகைப்பாடு
1831-ஆம் ஆண்டு இந்தியாவின் புதுச்சேரியில் இருந்த துரும்பன் பூனையைக் கண்ட இசிடோர் செஃவுரி செயிண்டு-இலைர் என்ற அறிஞர் Felis rubiginosa என்ற அறிவியற் பெயரை இட்டார். 1858-ஆம் ஆண்டு நிக்கோலை செவர்த்துசோவு என்ற அறிஞர் Prionailurus பேரினத்தைப் பரிந்துரைத்தார். 1939-ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய மாகாணத்தில் இருந்த ஒரு துரும்பன் பூனையைக் கண்ட இரெசினால்டு இன்னே பொக்காக்கு எனும் அறிஞர் அதற்கு Prionailurus rubiginosus phillipsi எனப் பெயரிட்டார்.
வாழிடங்களும் பரம்பலும்
துரும்பன் பூனைகள் சில குறிப்பிட்ட வகைச் சூழல்களில் மட்டுமே வாழ்வன. ஈர இலையுதிர்காடுகள், உலர் இலையுதிர்காடுகள், புதர்க்காடுகள், புல்வெளிக்காடுகள் ஆகிய வாழ்விடங்கள் இவற்றுக்கு ஏற்றவை. பசுமைமாறாக் காடுகளில் இவற்றைப் பொதுவாகக் காண முடியாது. இவை அடர்ந்த மரங்களுடைய பகுதிகளையும் பாறைப்பாங்கான பகுதிகளையும் விரும்புகின்றன.
நெடுங்காலமாக துரும்பன் பூனைகள் தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதாக எண்ணிவந்திருந்தாலும், அண்மைய பதிவுகளின்படி இவை இந்தியாவில் பெரும்பகுதியில் வாழ்வதாகத் தெரிகிறது. குசராத்தின் கிர் தேசியப் பூங்காவிலும், மகராட்டிரத்தின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலும், இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் இவற்றைக் கண்டுள்ளனர். படப்பொறிகளில் அகப்பட்ட படங்களின்படி துரும்பன் பூனைகள் பிலிபிட்டு புலிகள் காப்பகத்திலும் இந்தியத் தெராய்ப் பகுதியிலும் மகாராட்டிரத்தின் நாகசீரா கானுயிர்க் காப்பகத்திலும் வாழ்வதைக் கண்டறிந்துள்ளனர். மேற்கு மகராட்டிரத்தில் மாந்தர் நிறைந்துள்ள வேளாண் பகுதிகளில் எலிகள் மிகுதியாகவுள்ள இடங்களில் துரும்பன் பூனைகள் குட்டியிட்டு வாழ்ந்து வருகின்றன. 2014-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களிலும் 2015-ஆம் ஆண்டு எப்பிரலிலும் அரியானா மாநிலத்திலுள்ள கலேசர் தேசியப் பூங்காவில் துரும்பன் பூனைகள் தானியங்கு பொறிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலுள்ள மிர்சாப்பூர் வனப்பகுதியிலும் இவை படம்பிடிக்கப்பட்டுள்ளனன.
நேப்பாளத்தின் பர்தியா தேசியப்பூங்காவில் 2012-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திலும் சுக்கிலபந்தா கானுயிர்க் காப்பகத்தில் 2016-ஆம் ஆண்டு மார்ச்சிலும் துரும்பன் பூனைகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் மலைக்காடுகளிலும், உயரம் குறைந்த மழைக்காடுகளிலும் துரும்பன் பூனைகள் பதிவாகியுள்ளன. பசுமைமாறா உலர்க் காடுகளிலொன்றும் பசுமைமாறா மழைக்காடுகளில் ஒன்றுமாக இருவேறு இனக்குழுக்கள் இலங்கையில் அறியப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆர்ட்டன் சமவேளிக் காடுகளில் 2084 முதல் 2162 மீட்டர் உயரத்தில் இவை பதிவாயின.
நடத்தை
இயல்பான காட்டுச் சூழலில் துரும்பன் பூனைகளின் நடத்தையைப் பற்றி மிகுதியாகத் தெரியவில்லை. வளர்ப்புச் சூழலில் இவை பெரும்பாலும் இரவாடிகளாகவும் பகலில் அவ்வப்போது இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. காட்டிலும் இரவிலேயே பதிவாகியிருக்கின்றன. இலங்கையிலுள்ள ஆர்ட்டன் சமவெளி தேசியக் காப்பகத்தில் பொழுதடைந்த பின் விடியலுக்கு முன்னே இடைப்பட்ட வேளையிலேயே துரும்பன் பூனைகளின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அவ்வப்போது மட்டும் இப்பூனைகள் பகலில் தென்பட்டிருக்கின்றன. மரங்களிலும் குகைகளிலும் பல துரும்பன் பூனைகள் ஒளிந்திருந்தது பதிவாகியுள்ளது.
துரும்பன் பூனைகள் பொதுவாக கொறிணிகளையும் பறவைகளையும் வேட்டையாடித் தின்பவை. எனினும் இவை அவ்வப்போது பல்லிகள், தவளைகள், பூச்சிகள் போன்ற பிற உயிரினங்களையும் தின்கின்றன. துரும்பன் பூனைகள் முதன்மையாகத் தரையிலேயே வேட்டையாடுகின்றன. விரைந்து பாய்ந்து இரையைப் பிடிக்கின்றன. இவை பெரிய கோண்மாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக மரங்களில் ஒளிந்து கொள்கின்றன எனக் கருதுகிறார்கள். வளர்ப்புச் சூழலில் ஆண் பூனைகளும் பெண் பூனைகளும் தங்கள் வாழிட எல்லைகளை வரையறுப்பதற்காக சிறுநீரைச் சிவிறுகின்றனன.
இனப்பெருக்கம்
பென் துரும்பன்களின் சினைப்பருவம் ஐந்து நாட்கள் மட்டுமே நீடிக்கும். மிகவும் குறுகிய காலத்துக்குள் இவற்றின் உடலுறவு முடிவடைந்துவிடும். உடலுறவு நேரத்தில் பெண் பூனைக்கு அச்சுறுத்தல் நேரலாம் என்பதால் குறுகியகால உடலுறவுத் தகவமைப்பை இவை பெற்றிருக்கக் கூடும். உடலுறவுக்குப் பின் சூல்கொள்ளும் துரும்பன் பூனை மறைவிடமொன்றைத் தேர்ந்தெடுத்து ஒதுங்கும். 65 முதல் 70 நாள் சூல்கொள்ளற் காலத்துக்குப்பின் ஒன்றோ இரண்டோ குட்டிகளை ஈனும். பிறக்கும்போது குட்டிகள் வெறும் 60 முதல் 70 கிராம் எடையில் இருக்கின்றன. வரிசையாகக் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. 68 வாரங்களில் குட்டிகள் வளர்ந்து பருவம் எய்தி இனப்பெருக்கத்துக்கு அணியமாகின்றன. அந்தப்பருவத்தில் அவற்றின் உடலில் துரும்பு நிறத்தில் பொட்டுப் பொட்டாகத் தோன்றுகின்றன. வளர்ப்புச்சூழலில் துரும்பன் பூனைகள் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. காட்டில் இவற்றின் வாழ்நாள் இன்னும் அறியப்படவில்லை.
அச்சுறுத்தல்கள்
இலங்கையிலும் இந்தியாவிலும் பல இடங்களில் காடுகளை அழித்து பயிரிடுவதால் துரும்பன் பூனைகள் அச்சுற்றுத்தலுக்கு உள்ளாகின்றன. இவை வேளாண் பகுதிகளிலும் அவ்வப்போது காணப்பட்டாலும் அங்கெல்லாம் எந்த அளவுக்குத் தாக்குப்பிடிக்கின்றன எனத் தெரியவில்லை. துரும்பன் பூனைகளை அவ்வப்போது அவற்றின் தோலுக்காக வேட்டையாடுவதும் பதிவாகியுள்ளது. சில இடங்களில் உணவுக்காகவும், கால்நடைகளை இவை வேட்டையாடுவதாலும் மக்கள் இப்பூனைகளை வேட்டையாடுகின்றனர்.
காப்புநிலை
இந்தியாவில் துரும்பன் பூனைகள் அருகிவரும் இனங்களுக்கான பாதுகாப்புப் பட்டியல் ஒன்றிலும் இலங்கையில் இரண்டிலும் சேர்க்கப் பட்டுள்ளன. இவை வாழும் பகுதிகள் முழுமையிலுமே இவை காப்பிலுள்ளன. இவற்றை வேட்டையாடுவதும் விற்பதும் இந்தியாவிலும் இலங்கையிலும் தடை செயப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டுவாக்கில் 56 துரும்பன் பூனைகள் 8 நிறுவனங்களில் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றுள் 11 பூனைகள் கொழும்பு விலங்குக் காட்சியகத்திலும், 45 பூனைகள் வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தன.
பிறமொழிப் பெயர்கள்
துரும்பன் பூனைகளைச் சிங்களத்தில் கோல திவியா என்றும் பலால் திவியா என்றும் அழைக்கின்றனர். மலையாளத்தில் துரும்பன்பூச்சா (തുരുമ്പൻപൂച്ച) என்றும் தெலுங்கில் நாமால பில்லி (నామాల పిల్లి) என்றும் இவற்றை அழைக்கின்றனர்.