சங்காய் மான் (Sangai, Rucervus eldii eldii) அழிவின் விளிம்பில் அச்சத்துடன் நின்று கொண்டிருக்கும் அழியும் மானினங்களில் ஒன்றாகும். இது முன்மண்டைக்கொம்பு மானினத்தின் (brow-antlered deer) உள்ளினமாகும். ருசெர்வசு எல்டி எல்டி என்பது சங்காய் மானின் அறிவியல் பெயராகும். இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே இம்மானினம் காணப்படுகிறது. மணிப்பூர் மாநில விலங்காகவும் சங்காய் மான் கருதப்படுகிறது. சதுப்பு நிலப்பகுதியில் கூட்டம் கூடமாக இவை வாழ்கின்றன. மணிப்பூரின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரியின் வடக்குப்பகுதியில் இருக்கும் கெய்புல் லாம்சோ தேசியப் பூங்காவில் இவை பெரும்பாலும் காணப்படுகின்றன.
உடலமைப்பு
கண்கவரும்வகையில் முன்மண்டையில் முளைத்து வட்டமாக அமைந்துள்ள கொம்புகளையுடைய பெரிய மான் இது. இவ்வகை மான்களின் கொம்பு நுனியில் பல கிளைகள் காணப்படும். குளிர்காலத்தில் செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. வெயில்காலத்தில் அது சற்று வெளிறிக்காணப்படும். இவற்றின் குளம்புகள் சரிந்தும் விரிந்தும் அமைந்துள்ளன. அத்துடன் குளம்புமூட்டும், சுவட்டுநகமும் நீளமாக, மயிரின்றி சதுப்பு நிலத்துக்குத் தக்கவாறமைந்துள்ளது.