தைவான் வயல் சுண்டெலி அல்லது பார்மோசன் மர சுண்டெலி ( அப்போடெமசு செமோட்டசு) என்றும் அழைக்கப்படும் எலியானது, முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி ஆகும். இது தைவானில் மட்டுமே காணப்படுகிறது.
தைவான் வயல் எலி முதன்மையாக மொன்டேன் பகுதியில் 1,400 முதல் 3,000 மீ உயர நிலப்பரப்பில் காணப்படுகிறது. இவை இயற்கை அல்லது செயற்கை காடுகள், புல்வெளிகள், பண்ணைகள் மற்றும் முகாம் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை உணவாக உண்ணுகின்றன.
உருவ அளவீடுகளின் அடிப்படையில், தைவான் வயல் சுண்டெலிகள் தென்சீன வயல் சுண்டெலியிலிருந்து (அப்போடெமசு டிராகோ) வேறுபட்டதல்ல என்றும், இதனை ஒரு தனி இனமாகக் கருதக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
தைவான் வயல் சுண்டெலியில் ஆண் பெண் உருவ வேறுபாடு கொண்டது. ஆண் பொதுவாகப் பெண்களை விட பெரியது (ஆண்: 25.6 ± 0.5 கிராம்; பெண்: 23.8 ± 0.5 கிராம் எடையுடையது ). அடையாளமிட்டு-பிடிப்பு-மீளப்பெறுதல் தரவுகளின் அடிப்படையில் இதனுடைய ஆயுட்காலம் காடுகளில் 1 வருடத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.