ஆர்க்டிக் முயல் (Lepus arcticus) அல்லது துருவ முயல் என்பது துருவப்பகுதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்ட ஒரு முயல் இனம். இது ஆர்க்டிக் பனிப்பகுதியில் வாழ்வதற்கேற்ப அடர்ந்த மயிர்க்கற்றைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை கதகதப்பாக இருக்க தரைப்பகுதியில் பனிக்கு அடியில் துளைகள் அமைத்து வாழ்கின்றன. இவை நீளமான காதுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றால் மணிக்கு 40 மைல் தொலைவு வரை ஓட இயலும். ஆர்க்டிக் ஓநாய்களே இவற்றின் முதன்மையான இரைகொல்லியாகும்.
இம்முயல்கள் கனடா, அலாஸ்காவின் வடகோடிப்பகுதிகள், கிரீன்லாந்தின் துந்தராப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆர்க்டிக் முயல் 22 முதல் 28 அங்குல நீளமும் 4 முதல் 5.5 கிலோ எடையும் இருக்கும். தாவரங்களும் இலைகள், புற்களுமே இவற்றின் உணவு.
பண்புகள்
லகோமார்பா வரிசையில் உள்ள பெரிய விலங்குகளுள் ஆர்க்டிக் முயலும் ஒன்று. வால் நீங்கலாக இவை சராசரியாக 43 முதல் 70 செ.மீ நீளம் வரை இருக்கும். உடல் எடை 2.5 கிலோ முதல் 5.5 கிலோ வரை இருக்கும். எனினும் 7 கிலோ உள்ள பெரிய முயல்களும் உள்ளன.
பெண் முயல்கள் எட்டு குட்டிகளை வரை ஈனும். குட்டிகள் தாமாக உணவு தேடி வாழக் கூடிய நிலை வரும் வரை தாயை அண்டியே பிழைக்கின்றன.
ஆர்க்டிக் முயல்களின் வாழ்நாள் குறித்த தகவல்கள் அதிகளவு இல்லையெனினும் அவற்றின் இயலிடத்தில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று அறியப்படுகிறது.