பெரல் ஆடு (FERAL GOAT) என்பது இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த பாரன் தீவு, நார்காண்டம் ஆகிய தீவுகளில் பெரல் வகை ஆடுகள் காணப்படுகின்றன. இவை 1891 இல் போர்ட் பிளேரில் இருந்து விட்டுச் செல்லப்பட்ட ஆடுகள் என கருதப்படுகிறது. இந்த ஆடுகள் அந்தக் கடுமையான சூழலில் வாழப்பழகி தங்களை தகவமைத்து காட்டு ஆடுகளாக மாறிவிட்டன. இந்தியாவில் நெருப்பை கக்கும் ஒரேயொரு எரிமலை பாரன் தீவில் அமைந்துள்ளது. இந்த ஆடுகளின் சிறப்பம்சமானது, உப்புநீரைக் குடித்தும் எரிமலைத் தீவில் வளரும் தாவரங்களை உண்டும் உயிர் வாழ்வது ஆச்சரியமான செய்தியாகும்.
மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வில், இந்த ஆடுகள் சுத்தமான நீரையும் உப்புநீரையும் 1: 4 என்ற விகிதத்தில் கலந்துள்ள நீரை குடிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. இந்த ஆடுகள் காலை, மாலை நேரத்தில் மட்டுமே மேய்கின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனுகின்றன, வளர்ந்த ஆடுகள் 25 முதல் 30 கிலோ எடையுள்ளவை. இவற்றின் இறைச்சி வங்காள இன ஆடுகளைப் போன்றே சுவையானது.