கடற்பாம்பு (Sea snake) என்பது கடற்சூழலில் வாழும் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்பு குடும்பம் ஆகும். இவை நிலத்தில் வாழ்ந்த மூதாதைகளில் இருந்து படிவளர்ச்சி அடைந்தவை. பெரும்பாலான கடற்பாம்புகள் எல்லா நேரமும் கடலிலேயே வாழத் தகவமைத்துக் கொண்டன. இவற்றின் வால் துடுப்பு போல அமைந்திருக்கும். இவற்றால் நிலத்தில் அசையக் கூட முடியாது.
கடற்பாம்புகள் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான வெதுவெதுப்பான கரையோரக் கடல் நீரில் காணப்படுகின்றன. கடற்பாம்புகள் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் போன்ற குளிரான நீரில் காணப்படுவதில்லை.
இனப்பெருக்கம்
ஒரேயொரு சிற்றினத்தைத் தவிர அனைத்துக் கடற்பாம்புகளும் குட்டி ஈனுபவை. நீரில் பிறக்கும் குட்டிகள் தங்கள் வாழ்நாள் முழுதையும் நீரிலேயே கழிக்கின்றன.
நச்சுத்தன்மை
எல்லாக் கடற்பாம்புகளுமே நச்சுத் தன்மை உடையவை. ஆனால் இவற்றால் மனித உடலுள் செலுத்தப்படும் நஞ்சின் அளவு தரைப்பாம்புகளை விடக் குறைவாக இருக்கும். எப்படி இருந்தாலும் கடற்பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.