அழகிய நீர் மூஞ்சூறு (Elegant water shrew)(நெக்டோகேல் எலிகன்சு) எனும் மூஞ்சூறு சிற்றினம் பாலூட்டி வகுப்பில் சோரிசிடே குடும்பத்தில் சோரிசினே உட்குடும்பத்தினைச் சார்ந்தது. இது நெக்டோகேல் பேரினத்தினைச் சார்ந்த ஒரே ஒரு சிற்றினமாகும்.[சான்று தேவை] இது இந்தியாவில் சிக்கிம் மாநிலத்திலும் சீனாவிலும் வாழ்கிறது. இது தென்கிழக்கு திபெத்தில் காணப்படுவதால் திபெத்து நீர் மூஞ்சூறு எனவும் அழைக்கப்படுகிறது.
வாழிடம்
நீர் மூஞ்சூறு என இதன் பொதுவான பெயர் குறிப்பிடுவது போல, நெ. எலிகன்சு தண்ணீர் அல்லது அதற்கு அருகில் வாழ்கின்றது. சீனா, திபெத், நேபாளம் போன்ற பகுதிகளில் சுத்தமான, மலையிலுள்ள நீரோடைகளில் இதைக் காணலாம். இந்த மூஞ்சூறு நீரிலும் நீரோடை படுக்கைகளிலும் வாழ்கிறது.
உடலமைப்பு
அழகிய நீர் மூஞ்சூறு மென்மையான, வெல்வெட்டி உரோமங்களைக் கொண்டுள்ளது. சிலேட்டு நிற உரோமங்கள், நீள வெள்ளை முடிகளுடன் கலந்து முதுகுப்பகுதியில் காணப்படுகிறது. மூஞ்சூறுவின் வயிற்றுப் பக்கமானது முதுகு பக்கம் போன்றனது, ஆனால் நீள வெள்ளை முடிகள் காணப்படுவதில்லை. இதனுடைய வண்ணம் இதன் வாழிட பின்னணியுடன் எளிதாக பொருந்து அமைகிறது. இதனுடைய அளவு ஒரு மூஞ்சூறுவின் அளவுகளில் பெரியது. இதன் தலை மற்றும் உடல் நீளம் 90-128 மி.மீ வரை இருக்கின்றது. அதன் வால் நீளம் மட்டும் 89-110 மி.மீ ஆகும்.
உணவு
நெ. எலிகன்ஸ் நீர்வாழ் உயிரினமாகும். இது உணவுக்காக நீச்சல் மற்றும் டைவிங்கிற்கு ஏற்ற தகவமைப்பினைப் பெற்றுள்ளது. இதன் பற்கள் சிறிய மீன்களை சாப்பிடுவதற்கு ஏற்ப அமைந்துள்ளன. இது சாப்பிடும் உணவுகளில் பூச்சிகள் மற்றும் இளம் உயிரிகள், ஓட்டுமீன்கள் மற்றும் சிறிய மீன்கள் அடங்கும்.
வெளி இணைப்புகள்
அழகிய நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா