பனிக்காலணி முயல்

பனிக்காலணி முயல் (ஆங்கிலப் பெயர்: Snowshoe hare, உயிரியல் பெயர்: Lepus americanus), அல்லது வேறுபடும் முயல், அல்லது பனிக்காலணி குழி முயல் என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு முயல் வகை ஆகும். இதன் பின்னங்கால்களின் அளவு பெரியதாக இருப்பதால் இது பனிக்காலணி முயல் என்று அழைக்கப்படுகிறது. இதன் கால் குதிக்கும்போது மற்றும் நடக்கும்போது பனியில் அமுங்கி விடாமல் தடுக்கிறது. உறைய வைக்கும் வெப்ப நிலைகளிலிருந்து இதன் காலை பாதுகாப்பதற்காக இதன் உள்ளங்கால்களிலும் ரோமம் உள்ளது.


உருமறைப்பிற்காக இதன் ரோமம் குளிர் காலத்தில் வெள்ளை நிறமாகவும் மற்றும் கோடை காலத்தில் துரு போன்ற பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. இதன் பக்கவாட்டுப் பகுதி வருடம் முழுவதும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். இதன் காதின் ஓரங்களில் கறுப்பு குடுமி போன்ற ரோமத்தை வைத்து பனிக்காலணி முயலை மற்ற முயல்களில் இருந்து வேறுபடுத்த முடியும். இதன் காதுகள் மற்ற பெரும்பாலான முயல்களின் காதுகளை விட விட சிறியதாகவே இருக்கும்.


கோடைகாலத்தில் இது புற்கள், பன்னங்கள் மற்றும் இலைகள் போன்ற தாவரங்களை உண்கிறது. குளிர் காலத்தில் இது கிளைகள், மரங்களின் பட்டைகள், பூக்களின் மொட்டுகள் மற்றும் தாவரங்களை உண்கிறது. ஆர்டிக் முயலைப் போலவே இதுவும் சில நேரங்களில் இறந்த விலங்குகளை உணவாக உட்கொள்ளும் என அறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிறு குழுக்களாக இது உணவு உண்பதை நம்மால் காண முடியும். இது பெரும்பாலும் இரவு நேரத்திலேயே செயல்பாட்டுடன் இருக்கும் மற்றும் இந்த விலங்கு குளிர்கால உறக்கத்திற்கு செல்வதில்லை. இது வருடத்திற்கு நான்கு முறை குட்டி ஈனும். ஒரு முறைக்கு சராசரியாக 3 முதல் 8 குட்டிகளை ஈனும்.


பனிக்காலணி முயலின் முக்கியமான எதிரி கனடா சிவிங்கி பூனை ஆகும். உரோம வேட்டையர்கள் பிடித்த விலங்குகளின் வரலாற்றுப் பதிவுகள் நமக்கு சிவிங்கி பூனை மற்றும் முயல்களின் எண்ணிக்கையின் உயர்வு மற்றும் வீழ்ச்சி ஒரு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதை காட்டுகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள உயிரியல் மாணவர்களுக்கு கொன்றுண்ணிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உணவு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்கிற ஒரு ஆய்வாக முயல்கள் அறியப்படுகின்றன.


முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள்


பனிக்காலணி முயல்கள் மாலை முதல் இரவு முழுவதும் செயல்பாட்டுடன் இருக்கும். இவை கூச்ச சுபாவம் கொண்டவை மற்றும் ரகசியமாக வாழ்பவை ஆகும்.


கொன்றுண்ணிகள்


பனிக்காலணி முயல்களை பல்வேறு கொன்றுண்ணிகள் உணவாக உட்கொள்கின்றன. கனடா சிவிங்கி பூனை, வீட்டு நாய், வீட்டு பூனை, ஓநாய்கள், மலை சிங்கங்கள், பெரிய கொம்பு ஆந்தை, பட்டை ஆந்தை, புள்ளி ஆந்தை, மற்ற ஆந்தைகள், சிவப்பு வால் வல்லூறுகள், வடக்கு வாத்து பாறு, மற்ற வல்லூறுகள், தங்க கழுகுகள் மற்றும் காகங்கள் ஆகிய கொன்றுண்ணிகளை குறிப்பாக கூறலாம். அமெரிக்க கருப்பு கரடிகளும் இவற்றை உண்ணுகின்றன. அமெரிக்காவின் பனிப்பாறை தேசிய பூங்காவில் உள்ள பனிக்காலணி முயல்களை வடக்கு ராக்கி மலை ஓநாய்கள் உணவாக உட்கொள்கின்றன.


வெளி இணைப்புகள்

பனிக்காலணி முயல் – விக்கிப்பீடியா

Snowshoe hare – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.