பென்னட் மர கங்காரு

பென்னட் மர-கங்காரு (Bennett’s tree-kangaroo) என்பது டென்ட்ரோலாகஸ் பென்னெட்டியானஸ் ((Dendrolagus bennettianus) சிற்றினத்தினைச் சார்ந்த கங்காரு ஆகும். ஆண் கங்காரின் எடையானது 11.5 கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். பெண் கங்காரின் எடையானது 8 முதல் 10.6 கிலோ வரை இருக்கும். இவை மிகவும் சுறுசுறுப்பானவை, சுமார் 9 மீட்டர் உயரம் வரை தாவி ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவக்கூடியது. சுமார் 18 மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தாலும் எவ்வித அடிபடாமல் விழக்கூடியது.


வாழ்விடம்


மரக்கங்காரு குயின்ஸ்லாந்தின் மலைப்பகுதிகளிலும் குக்டவுனின் தென்பகுதியிலுருந்து டெய்ண்ட்ரீ வடபகுதியிலுள்ள மலை அடிவாரம் வரையுள்ள மழைக்காடுகளிலும் வாழக்கூடியது. இது எப்போதாவது ஸ்க்லெரோபில் வனப்பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு பரந்த அளவிலான மழைக்காடுகளில் உள்ள மரங்களின் இலைகளை உண்டு வாழ்கிறது. பெரும்பாலும் ஷெஃப்லெரா ஆக்டினோபில்லா (குடை மரம்), திராட்சைக் கொடிகள், பெரணி மற்றும் பல்வேறு காட்டுப் பழங்களைச் சாப்பிடும்.


உணவு


பென்னட் மரக் கங்காரு தாவர உண்ணியாகும். இது சுமார் 33 வகையான தாவர இனங்களை உண்ணுகின்றன.


அண்மைக் காலமாகப் பழங்குடியினரால் இக்கங்காரு அரிதாகவே வேட்டையாடப்படுகிறது. மலைப்பாம்புகள் மற்றும் டிங்கோ நாய் இதனை வேட்டையாடும் முதன்மையான எதிரிகளாகும். இந்த கங்காரு இனம் இதனுடைய மூதாதையருடன் நெருக்கமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.


உடலமைப்பு


மற்ற மரத்தில் வாழும் கங்காருக்களைப் போலவே இவ்வகை கங்காருவும் நிலத்தில் வாழும் கங்காருக்களைவிட நீண்ட முன் கரத்தினையும், சிறிய பின் கரத்தினையும் நீண்ட தடிமனான வாலினையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும் கங்காருவின், கன்னம், தொண்டை மற்றும் அடிவயிறு வெளிறிய வண்ணத்தில் காணப்படும். நெற்றி மற்றும் முகவாய் சாம்பல் நிறத்தில் இருக்கும். கால்களும் கைகளும் கருப்பு நிறமுடையன. வாலின் அடிப்பகுதியில் ஓர் கருப்பு புள்ளியும் மேல் பகுதியில் வெளிறிய புள்ளியும் காணப்படும். காதுகள் குறுகி வட்டமானதாகும்.


பாதுகாப்பு நிலை


பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (ஐ.யூ.சி.என்) பட்டியலில் பென்னட் மரக் கங்காருவின் இன்றைய நிலையானது “அச்சுறுத்தலுக்கு அருகில்” உள்ள இனமாக மதிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் வாழிடப்பரப்பும் விரிவடைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பொதுவாகக் காணக்கூடிய உயிரினமாக இது உள்ளது. 2006 ஆம் ஆண்டில் குக்டவுனுக்கு தெற்கே அமோஸ் பே சாலையில் இறந்து கிடந்த கங்காரு ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கங்காருவின் எண்ணிக்கை, வாழிட வரம்பு அதிகரிப்பு அதிகரிப்பின் காரணமாக உலக பாரம்பரிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவது உள்ளது. மேலும் பழங்குடி மக்களால் வேட்டையாடப்படும் தற்பொழுது நிகழ்வதில்லை. உலகின் சிறந்த நிபுணர்களான ரோஜர் மார்ட்டின் மற்றும் லூயிஸ் ராபர்ட்ஸ் இந்த சிற்றினத்தினைப்பற்றி “பாதுகாப்பானது” என்று வகைப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்.


வெளி இணைப்புகள்

பென்னட் மர கங்காரு – விக்கிப்பீடியா

Bennett’s tree-kangaroo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.