நல்லங்கு (Armadillo) என்பது ஓர் உயிரினமாகும். ஆர்மடில்லோ என்ற எசுப்பானியச் சொல்லுக்கு, கவசம் உடைய சிற்றுயிரி என்பது பொருளாகும். இந்த உயிரினத்தின் உடல் அமைப்பைக் கொண்டு, இதனைக் கவச உடலிகள் பிரிவில் சேர்த்துள்ளனர். கவச உடல் அமைப்புடைய விலங்குகளுக்கு, தமிழில் அழுங்கு என்று பெயர். நல்லங்கை ஆங்கிலத்தில் ஆர்மடில்லோ என்பர்.
வகைப்பாடு
இவை வகைப்பாட்டியலின்படி, கவச உடலிகள் என்ற வரிசையில் அடங்குகிறது. இவ்வரிசையில், இன்றுள்ள ஒரே ஒரு குடும்பம்[கு 2] நல்லங்குகள் ஆகும். இக்குடும்பத்தில், 10 பேரினங்களும், 20 சிற்றினங்களும் உள்ளன. தொல்லுயிரியல் ஆய்வில், மேலும் இரண்டு குடும்பங்கள் இருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்புதைப்படிவங்களைக் கொண்டு, சில கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழ்நிலைகளை, இன்றைய சூழலோடு ஒப்பிட்டு ஆராய முடிகிறது.