காஷ்மீர் கஸ்தூரி மான் (Kashmir musk deer) (மோசுகசு கப்ரியசு) ஆப்கானித்தான், இந்தியா மற்றும் பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்ட அருகிய இனமாகக் கத்தூரி மான் உள்ளது. சமீபத்திய ஆய்வுகள் கத்தூரி மான் மேற்கு நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்த இனம் முதலில் ஆல்பைன் கத்தூரி மானின் துணையினமாக விவரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இது தனி சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மான் 60 செ.மீ. உயரமுடையது. ஆண் மான்களுக்குக் கொம்புகள் உண்டு. இவை இனச்சேர்க்கையின் போது பெண் மானைக் கவரப் பயன்படுத்துகின்றன.
ஆசியா முழுவதும் காணப்படும் ஏழு ஒத்த உயிரினங்களில் ஒன்றான காசுமீர கத்தூரி மான், வாழ்விட இழப்பு காரணமாகவும், வேட்டையாடுபவர்களாலும் ஆபத்தில் உள்ளது. இந்த மான்களில் காணப்படும் விலைமதிப்பற்ற வாசனை சுரப்பிகளுக்காக வேட்டையாடப் படுகிறது. இது பாக்கித்தானில் ஆபத்தான உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[சான்று தேவை]
ஆப்கானிஸ்தானில் 1948 முதல் 2009 வரை காசுமீர கத்தூரி மான் அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஆப்கானித்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் ஜூன் 2009 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்தது மூன்று மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுப்பாடற்ற வேட்டை, விரைவான காடழிப்பு, வாழ்விடச் சிதைவு மற்றும் கடுமையான சட்டங்கள் இல்லாததால் கத்தூரி மானின் அழிவு நீடிக்கின்றது. கோடையில், கத்தூரி மான் சிதறிய பாறை வெளிப்புறங்களில் ஆல்பைன் காடுகளில் 3,000 முதல் 3,500 மீ. உயரத்தில் காணப்படுகிறது. இவை தொடர்ந்து செங்குத்தான சரிவுகளை (≥ 20 °) பயன்படுத்துகின்றன. இதனால் இவற்றை அணுகுவது கடினமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் கத்தூரி மான்களின் பொருத்தமான வாழ்விடங்களாக சி. நூரிஸ்தான் (75.5%), குனர் (14.4%) மற்றும் லக்மான் (10.1%) மாகாணங்கள் உள்ளன. இம்மாகாணங்களில் சுமார் 1,300 சதுர கி.மீ. பரப்பளவில் இவை காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் பரந்ததாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் காசுமீர கத்தூரி மான்களின் வாழ்விடங்கள் தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு துண்டாகத் உள்ளன.