கோவாலா

கோவாலா (Koala, அறிவியல் பெயர்: Phascolarctos cinereus) என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.


பெயர்க் காரணம்


கோவாலா என்பது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு சொல் ஆகும். தாருக் மொழியில் “கூலா” (gula) என அழைக்கப்பட்ட்ட்து. “தண்ணீர் (தேவை) இல்லை” என்பது இதன் பொருள். அதாவது, கோவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்டஸ் (eucalyptus) மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன.


முதலில் ஆங்கிலக் குடியேறிகள் இவற்றைக் “கோவாலாக் கரடி” எனவே அழைத்தனர். குரங்குக் கரடி, “மரக் கரடி” என்ற பல்வேறு பெயர்களிலும் இவை அழைக்கப்பட்டன.


அறிவியல் பெயரான “பாஸ்கொலார்க்டஸ்” (Phascolarctos) கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது (phaskolos “அடைப்பம்”, arktos “கரடி”). கோவாலாக்களின் வகை இலத்தீன் மொழியில் cinereus, அதாவது “சாம்பல்-நிறம்”.


காணப்படும் இடங்கள்


இவை ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து, வடக்கு நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா, தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களில் பெருமளவு காணப்படுகின்றன.


அமைப்பு


இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப்பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.


உணவு


கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்டஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன. கோவாலா இந்த இலைகளையும் தெரிவு செய்தே சாப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்டஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோவாலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் (சர்க்கரை) உண்டு. இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.


அழிந்து வரும் இனம்


உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை, பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோவாலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப்படுவதால் இவற்றின் தொகை குறைந்து வருகிறது. மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயினாலும் இந்த இனம் அழிந்துவருகிறது.


வெளி இணைப்புகள்

கோவாலா – விக்கிப்பீடியா

Koala – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.