கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின் (Nilgiri marten, Martes gwatkinsii) என்பது தென்னிந்தியாவில் காணப்படும் ஒரேயொரு மார்ட்டின் இன விலங்கு. இது நீலகிரி மலையிலும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. மார்ட்டின் எனப்படுவது முசுட்டெலிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுன்னி விலங்கு.
தோற்றக்குறிப்பு
இவ்விலங்கு மஞ்சள் கழுத்து மார்ட்டினை ஒத்திருந்தாலும் சற்றுப் பெரியது. மண்டையோட்டின் அமைப்பும் மாறுபட்டது. வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எடை ஏறத்தாழ 2.1 கிலோ கொண்டது.
பரவல்
நீலகிரி மலைப்பகுதியிலும் குடகின் தென்பகுதியிலும் திருவிதாங்கூர் பகுதியிலும் காணப்படுகிறது.
பழக்கவழக்கங்கள்
இது பகலில் வேட்டையாடும் பகலாடி விலங்கு. மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வருகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், சிக்காடா பூச்சி முதலாவற்றை உணவாகக் கொள்கிறது.