வாத்தலகி

வாத்தலகி (Platypus) நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமாகும். தலையின் முன்பகுதியின் வடிவம் காரணமாக இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது. ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ் (Ornithorhynchus anatinus) என்ற இருசொற்பெயர் கொண்ட இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். ஆர்நிதொரிங்கிடே (Ornithorhynchidae) குடும்பத்தின் தற்போது வாழும் ஒரே உயிரினமாகும். இதன் முன்தலை நுனி கொம்புப் பொருள் படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்திருக்கும். ஆஸ்திரேலிய மற்றும் அதை சுற்றி உள்ள தீவுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.


வாழ்க்கை முறை


இவை சிற்றாறுகளின் கரையோரமாக வசிக்கும். வாத்தலகி கரையில் வளை தோண்டி வசிக்கும். வளையிலிருந்து நீருக்கு செல்லவும் ஒரு வாயில் இருக்கும். இந்த வளைக்கு உள்ளே அது கூடு கட்டி தனது மயிரை பரப்பி அதில் வசிக்கும். பெரும் பகுதி நேரத்தை நீரிலேயே கழிக்கும். இங்கே நீரின் அடித்தரையில் படிந்துள்ள மெல்லுடலிகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றை பிடித்து தின்னும். அடித்தளத்தில் இரை தேடுவதற்கு அதன் தனிவகைப்பட்ட அலகு அதற்கு உதவுகிறது.


உடலமைப்பு


வாத்தலகி நடுத்தர அளவுள்ள பிராணி. வாலுடன் சேர்ந்து இதன் நீளம் சுமார் 43 செ.மீ முதல் 50 செ.மீ வரை இருக்கும். வாத்தலகியின் பாதங்களில் நீந்து சவ்வுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி அது மிக நன்றாக நீந்தும். அகன்ற தட்டை வால் சுக்கானாக உதவுகிறது. வாத்தலகியின் கரும்பழுப்பு மயிர்கள் மிக அடர்த்தியானவை. ஆதலால் தண்ணீர் அதன் உடாக உட்புகுவதில்லை. அது கரையேறும் பொழுது அதன் உடல் உலர்ந்திருக்கும். செவி மடல்கள் இவற்றிற்கு கிடையாது. நீரில் மூழ்கும் போது அதன் செவித் துளைகள் அடைத்துக் கொள்கின்றன.


இனப்பெருக்க முறை


பெண் மிருகம் கூட்டில் இரண்டு சிறு முட்டைகள் இட்டு அவற்றை அடைகாக்கும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டிகள் ரோமம் அற்றவையாகவும், குருடாகவும் இருக்கும். தாய் பிராணி அவற்றுக்கு பால் ஊட்டும். வாத்தலகியின் பால் சுரப்பிகள் மற்றப் பாலூட்டிகளை விட எளிய கட்டமைப்பு உள்ளவை. இவற்றுக்கு முலைக்காம்புகள் கிடையாது. பாலூட்டும்போது தாய் பிராணி மல்லாந்து படுத்துக் கொள்ளும். குட்டிகள் அதன் வயிற்றின் மேல் ஏறி தங்கள் அலகுகளால் நசுக்கி பால் சுரக்கச் செய்து அதை நக்கி குடிக்கும்.


வாத்தலகியின் நஞ்சு


வாத்தலகிகளின் கைகளின் மணிக்கட்டு பகுதியில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக இரண்டு பாலினதிலும் இவை காணப்பட்டாலும் ஆண் வாத்தலகிகள் மட்டுமே விசத்தை சுரக்கின்றன. இந்த விசங்கள் பல புரதங்களின் கலவையாக இருக்கிறது. சிறிய உயிரினங்களை கொல்ல வல்ல இந்த நஞ்சு மனிதனை மரணிக்க செய்வதில்லை, ஆனால் அதிகமான வலியை இவை ஏற்படுத்தும். இந்த வலியானது சில நாள் தொடங்கி பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.


வெளி இணைப்புகள்

வாத்தலகி – விக்கிப்பீடியா

Platypus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.