பச்சைப் பஞ்சுருட்டான்

பச்சைப் பஞ்சுருட்டான் (Merops orientalis) அல்லது சிறிய பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பச்சை ஈப்பிடிப்பான் (Green Bee-eater) என்பது ஒல்லியான உடல் வாகைக்கொண்ட பஞ்சுருட்டான் குடும்பப் பறவை. இது ஒரு வலசை வாராப்பறவை. ஆனாலும் சில பருவ கால மாற்றங்களின் காரணங்களால் இவை சிறிது தூரம் வரை நகரக்கூடியன. இவை பெரும்பாலும் பூச்சிகளை உட்கொண்டு நீர்நிலைகளின் அருகாமையில் வாழ விரும்புகின்றன. ஒவ்வொரு இடத்திலும் நிறம் வெறுபட்டு இருப்பதனால் இவற்றின் பல துணை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை “ட்ரீ-ட்ரீ-ட்ரீ-ட்ரீ” என்று பறக்கும்கால் ஒலியெலுப்புகின்றன.


உருவ அமைப்பு


மற்ற பஞ்சுருட்டான்களைப் போல் இந்த பச்சைப் பஞ்சுருட்டானும் பலவண்ணங்கள் கொண்ட ஒரு அழகான சிறிய பறவையினம். சுமாராக 16 முதல் 18 செண்டிமீட்டர்கள் இருக்கும் இவைகட்கு 5 செ.மீ நீண்டுள்ள வால் இறகுகள் உள்ளது சிறப்பு. இருபால்களும் ஒன்று போல் காட்சியளிக்கும். முழுவதுமாக பலவகையான பச்சை நிறங்கள் கொண்டிருப்பினும், தாடை மற்றும் கண்ணங்களில் நீலம் இருக்கும். தலையின் மேற்புறம் தங்கம் கலந்து இருக்கும். பறப்பதற்கு உபயோகப்படும் சிறகுகள் இள்ஞ்சிவப்பாகவும் கருப்பு முடிவுகளோடும் இருக்கும். சீரான ஒரு கருப்பு கோடு அலகின் பின்புறமிருந்து தலையின் பின்புறம் வரை கண்கள் வழியாக செல்ல கண்கள் சிவந்து இருக்கும். கால்கள் சத்தின்றியும், விரல்கள் குட்டையாகவும் அடியில் செர்ந்தும் இருக்கும்.
தெற்காசிய பறவையினங்கள் கொண்டை மற்றும் முகத்தில் இளஞ்சிவப்பு நிறமும், பச்சை வண்ண அடிப்பகுதியையும் கொண்டிருக்க, அரேபிய பறவையினங்கள் பச்சைக்கொண்டையும், முகத்திலும் அடிப்பகுதியையும் நீல வண்ணம் கொண்டிருப்பதைக்காணலாம். அலகு கருத்த வணணம் பெற்றிருக்க, வாலில் நீண்டு விளங்கும் இறகினை இளம்பறவைகள் கொண்டிருப்பதில்லை.


பரம்பல்


பச்சைப்பஞ்சுருட்டான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் காணப்படுகின்றன. செனெகல், காம்பியா, நைல் நதிக்கரைகள், மெற்கு அரேபியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா முதல் வியட்நாம் வரையில் பரவியுள்ளன.
இவை தாழ்வாக இருக்கும் கிளைகளில் இருந்து வேட்டையாடும் திறனை வளர்த்திருப்பதனால் நன்றாக பரவியுள்ளன. மேலும், மற்ற பஞ்சுருட்டான்களைப்போல் அல்லாது இவைகளால் நீர்நிலைகளைவிட்டு மிகவும் தள்ளி இருக்கவும் இயலும். இவ்வினத்தை இமய மலைகளில் 5,000 முதல் 6,000 அடிகள் உயரத்திலும் காண முடியும். இவை வலசை வாராப்பறவைகள் எனினும், கோடை வேளைகளில் உஷ்ணம் மிகுந்த பகுதிகளுக்கும், மழை காலங்களில் காய்ந்த பகுதிகளுக்கும் சென்று விடுகின்றன. இவை கோடை நேரங்களில் மட்டும் பாகிஸ்தான் செல்லும் தன்மை கொண்டுள்ளன.


தெற்கிந்தியாவில் ஆற்றங்கரை உள்ள பகுதிகளில் இவற்றை அதிகமாக காண இயலும் (ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் சுமார் 157 பறவைகள் என்ற வீதத்தில்). இந்த கணக்கு வயல்சார்ந்த பகுதிகளில் 101 என்றும், மனித நடமாட்டமுள்ள மிகுதியாக உள்ள பகுதிகளில் 43-58 என்றும் தாழ்வதைக்கணக்கெடுத்துள்ளனர்.


உணவு


இன்னபிற பஞ்சுருட்டான்களைப்போன்று இந்த பச்சைப் பஞ்சுருட்டான் பூச்சிகள் உண்ணும். அதுவும் தேனீக்கள், குளவிகள், தும்பிகள், ஊசித்தும்பிகள் பறக்கும் எறும்புகள் என பறக்கும் ஜந்துக்களை காற்றில் பறந்தபடியே வேட்டையாடும். பொதுவாக ஒரு சிறு மரக்கிளையிலோ, அல்லது கம்பியின் மீதோ அமர்ந்துகொண்டு தன்னைச்சுற்றி உள்ள வளியை நோட்டம் விடும். சரியான தருணத்தில் பாய்ந்து பறந்து சென்று, உணவை அலகில் பற்றி வரும். எனினும் உணவை உட்கொள்ளுமுன் பூச்சிகளின் கடினமான வெளி ஓட்டை உடைக்க தான் அமர்ந்திருக்கும் கிளை அல்லது கம்பியில் அடித்து உடைத்து உண்ணும். தேனீக்களின் கொடுக்குகளையும் நீக்கிவிட்டு உண்ணும்.


வாழ்வியல்


வலசை போகும் பழக்கம் இல்லையெனினும், இவை மழைக்காலத்திற்கேற்ப இடம்பெயறும் தன்மை கொண்டுள்ளன. பொதுவாக காலை வேளைகளில் சோம்பலாக இருக்கின்றன. சூரியன் நன்கு வெளி வந்த பிறகும் பல பறவைகள் ஒன்று கூடி ஒட்டிக்கொண்டு தத்தம் அலகினை முதுகில் ஒளிக்கும் தன்மையுண்டு.


இப்பறவைகள் மணல் குளியலை மிகவும் விரும்புகின்றன. மேலும் பறந்து கொண்டே நீரில் தன் உடலின் கீழ்ப்பகுதியை நனைத்துக்கொண்டு குளிக்கவும் செய்கின்றன.


பொதுவாக சிறு குழுமங்களாகக் காணப்படும் இவை 200-300 பறவைகள் ஒன்றாக இணைந்தும் இருக்கும். ஒரே மரத்தின் மீது அமர்ந்திருக்கும் அனைத்தும் திடீரென்று ஒரே நேரத்தில் வெடிப்பது போல் பறந்து எழும்பி பின் அதே மரத்தில் வந்தமர்வது வழக்கம்.


நகரப்பறவை


பச்சைப் பஞ்சுருட்டான்கள் மனித நடமாட்டத்தை பொருட்படுத்தாமல் இருக்கும் இயல்புடையவை. எனவே இவற்றை நகரங்களிலும், புறநகர்ப்பகுதிகளிலும் பொதுவாக காண முடிகிறது. தொலைக்காட்சிக்கு தகவல் தரும் கம்பிகளின் மேல் அமர்ந்திருக்க வசதியாக உள்ள நிலையில், இவை அங்கிருந்து கோணல்-மாணலாக பறந்து சென்று பூச்சிகளை பிடித்து பின் கிளம்பிய இடத்திற்கே வருவதை காண முடிகிறது. இவ்வாறான நடவடிக்கையை காலை வேளைகளிலும் (7 மணி முதல் 8 மணி வரை), மாலை வேளைகளிலும் (4 மணிக்குப்பின்) பார்க்கலாம்.


இனவிருத்திக்காலம்


மார்ச் முதல் சூன் வரை இனவிருத்திக்காலமாகும்.


மணல் வீடு


மற்ற பஞ்சுருட்டான்கள் போலல்லாது இவை தனியே கூடுகளைக்கட்டுகின்றன. மணல்பாங்கான கரைகளில் பொந்து அல்லது குகை பொல் அமைத்து கட்டும் ஜோடிக்கு உதவியாளர்களாக மற்ற பறவைகளும் பணி செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வகையான கூடுகள் செங்குத்தாக உள்ள மணல்பாங்கான ஆற்றங்கரைகளில் அமைக்க, இப்பொந்துகள் 5 மீட்டர்கள் ஆழம் வரை கூட செல்லும்.


முட்டைகள்


3 முதல் 5 வெள்ளை நிறமுள்ள வட்ட வடிவிலான முட்டைகள் கூட்டிற்குள் இருக்கும் தரையில் இடும். முட்டைகளின் எண்ணிக்கை மழை மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கை வைத்தே நிர்ணயமாகிறது. இரு பாலும் முட்டைகள் அடை காக்கும். முட்டைகள் பொரிய சுமார் 14 நாட்கள் ஆகும்.


குஞ்சுகள்


பொரித்த குஞ்சுகள் சுமார் 3 அல்லது 4 வாரங்களில் வளர்ந்து விடும். இந்த நேரங்களில் தாயும் தந்தையும் செர்ந்து பூச்சிகளை பிடித்து வந்து ஊட்டுவதைக்காணலாம். அவை வளரும் போது தன் எடையை இழப்பதையும் கண்டுள்ளனர் பறவை ஆராய்ச்சியாளர்கள்.


மனிதருடன் பரிமாற்றங்கள்


ஓர் ஆராய்ச்சியின்படி இப்பறவைகள் மனிதனின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளும் தன்மையை உடையதாகப் பறைசாற்றுகிறது. முக்கியமாக தன் கூட்டின் அருகாமையில் மனிதன் கூட்டின் நுழைவாயிலைக் கண்டுபிடிப்பானா இல்லையா என நோட்டம் விட்டு அதற்கேற்றாற்போல் தன் நடவடிக்கைகளை மாற்றியமைப்பது இவற்றின் சிறப்பு. இன்னொரு உயிரினம்போல் நினைத்து செயல்படும் இத்திறன் இதற்கு முன்னர் குரங்கினங்களில் மட்டும் உண்டென்ற கோட்பாட்டை உடைக்கிறது.
இவை தேனீக்களை அதிகமாய் உட்கொள்வதால் தேனீ வளர்ப்போருக்கு பாதகமாக இருக்கவும் செய்கின்றன.


நோய்கள்


இவற்றை உட்புற ஒட்டுண்ணியான நாக்குப்பூச்சி வகை (“Torquatoides balanocephala”) குடலையும் வயிற்றையும் தாக்கும் அயாயம் உள்ளது.


வெளி இணைப்புகள்

பச்சைப் பஞ்சுருட்டான் – விக்கிப்பீடியா

Asian green bee-eater – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.