கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.
யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன.
வகைகள்
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.
உடலமைப்பு
இப்பறவைகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.
கீழேதரப்பட்டுள்ளவை உடல் திணிவு, உடலின் நீளம் மற்றும் இறக்கையின் குறுக்களவின் சராசரியின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் கழுகுகள் ஆகும்.
உணவு
இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய்க் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு.
வாழ்க்கை
இவை உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டுகின்றன. ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும் குஞ்சானது பொதுவாகப் பெண்ணாக இருக்கும். ஏனெனில் பெண் குஞ்சு ஆண் குஞ்சிலும் பார்க்கப் பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.[சான்று தேவை]
அருகிவரும் கழுகு
உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது. சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் சில நாடுகளில் கழுகுகளைத் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். 1940 க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது. காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதைத் தடுக்க முடியாதுள்ளது.
இரையைப் பிடிக்கும் விதம்
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையைத் தேடுகின்றன. இவற்றின் கண் மிகவும் கூர்மையானது. இதனால், தனது இரையைத் தொலைவிலிருந்தே கண்டுகொள்ளும். மேலிருந்து இரையைக் கண்டால் மிகவும் வேகமாகக் கீழிறங்கி இரையைத் தூக்கிச்சென்று உண்ணும்.
இவற்றின் கண் பார்வை மிகவும் கூர்மையானது. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் ஏறு என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப்பெறும் [பருந்தின் ஏறுகுறித் தொரீஇ (புறநானூறு 43, 5)]. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் பருந்தின் கவர்ச்சி என்றும் பெயர்.