பெயர்கள்
தமிழில் :சிறிய காட்டு ஆந்தை
ஆங்கிலப்பெயர் :Jungle owlet
அறிவியல் பெயர் :Glaucidium radiatum
உடலமைப்பு
20செ.மீ- காதுகள் நீண்டிராத வட்டத் தலை அமைப்புடைய இதன் பழுப்புநிற உடலில் வெளிர் செம்பழுப்புக் கோடுகள் நிறைந்திருக்கும். மார்பும் வயிறும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிறு கீற்றுக்கள் கொண்டவை.
காணப்படும் பகுதிகள் & உணவு
சமவெளி முதல் மலைகளில் 2000மீ. உயரம் வரை காடுகள் நிறைந்த வட்டாரங்களில் தமிழகமெங்கும் காணலாம். மலையடிவாரங்களில் தேக்கு மற்றும் மூங்கில் காடுகளைச் சார்ந்து திரியும். காலை மாலை நேரங்களில் மறைவிடத்திலிருந்து. வெளிப்பட்டு தத்துக்கிளி, வெட்டுக்கிளி சில்வண்டு சிறு பறவைகள் ஆகியவற்றை இரையாகத்தேடித் தின்னும். மேக மூட்டமான நாட்களில் பகல் முழுதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். கோ.குக் கோ.ஓகுக் என ஐந்து வினாடிகள் தொடர்ந்து கத்தும். யாரேனும் பார்க்கிறார்கள் எனத் தொpந்தவுடன் எழுந்து பறந்து வேறொரு மரத்தில் சென்று தலையை மட்டும் திருப்பி வந்தவர்கள் தன்னைத் தொடர்கின்றார்களா எனக் கவனிக்கும். வால்காக்கை, நீண்டவால் கரிச்சான் ஆகியவற்றுடன் சேர்ந்தும் இரை தேடக் காணலாம்.
இனப்பெருக்கம்
மார்ச் முதல் மே வரை மரப்பொந்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும்,குக்குறுவான் மரங்கொத்தி ஆகியவற்றின் பொந்துகளை பயன்படுத்தும்.