பனி ஆந்தை பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்ட பனிமிகுந்த பகுதிகளில் வாழும் ஒரு வகை ஆந்தை. இந்த ஆந்தைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன. இவை ஆர்க்டிக் ஆந்தை, வெண் பேராந்தை எனவும் அழைக்கப்படுகின்றன. மிதமிஞ்சிய பனியினைச் சமாளிக்க இவற்றின் கால்களிலும் இறகுகள் உள்ளன. இவை எலிகளையும் ஆர்க்டிக் முயல்களையும் வேட்டையாடி உண்கின்றன. லெம்மிங்குகள் மிகுந்திருக்கும் காலங்களில் இவை அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை இடும். இவை மரங்களற்ற துந்தரா பகுதிகளில் வாழ்வதால் தரையில் கூடுகட்டுகின்றன. இக்கூடுகள் இவற்றின் எதிரிகளைத் தொலைவில் இருந்து எளிதில் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். இப்பறவை கனடாவில் உள்ள கியூபெக் மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.
தோற்றக்குறிப்பு
இப்பறவையினை அதன் மஞ்சள் நிறக்கண்களையும் கரிய அலகினையும் கொண்டு எளிதில் அடையாளங் காணலாம். 52 முதல் 71 செ.மீ நீளமும் இறக்கை விரிந்த நிலையில் 125 முதல் 150 செ.மீ அகலமும் இருக்கும். இவை 1.3 – 1.6 கிலோ எடை வரை வளரும். இவற்றின் இயலிடத்தில் சராசரியாகப் பத்து ஆண்டுகள் வரை வாழும். பெரிய அளவிலான ஆந்தை வகைகளுள் பனி ஆந்தையும் ஒன்று. வட அமெரிக்காவில் சராசரி எடை மிகுந்த ஆந்தைகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.