புட்டா/புள்ளி ஆந்தை (Athene brama) என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஒரு வகையான சிறு ஆந்தையினம். இவை பொதுவாகக்காணப்பெறும் பறவையினம். காடுகள் மட்டுமின்றி தோட்டங்கள், வயல்வெளிகள் மற்றும் மனித வாழ்விடங்களின் அருகிலும் தென்படும். இவை சிறு கூட்டங்களாக மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் இளைப்பறும். இவை இலங்கையில் காணப்படவில்லை. ஆனால் பாக் நீரிணையில் இராமேஸ்வரத்திற்கு 30 கிமீ தொலைவு வரை தென்படுகின்றன. எலிகளும் மற்ற கொரிப்பான்களும் மனிதரின் வாழும் இடங்களில் காணப்பெறுவதால் இவை நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிறைய வாழும். வாசம் செய்யும் இடத்திற்கேற்ப இவை வண்ணங்களில் சிலபல மாற்றங்களைக்காட்டுகின்றன.
தோற்றம்
புட்டா ஆந்தை சிறிய ஆனால் உருண்டை வடிவில் குண்டாக தோற்றமளிக்கும் இரவுப்பறவை. இவை 21 செ.மீ. வரையே வளர்கின்றன. உடலின் மேற்பகுதி சாம்பல் மிகுதியாய் கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் உள்ளது. அடிப்பகுதியில் பழுப்பு நிறத்திலான புள்ளிகள் காணலாம். உடல் முழுதும் ஒரு புடவையில் உள்ளது போலவே கருப்பு புள்ளிகள் (புட்டா) உள்ளதால் இப்பறவைக்கு இப்பெயர். ஆந்தைகளுக்கே உரிய முகம் உருண்டை சற்றே வெளிறிப்போனது போல் காட்சியளிக்கிறது. இதன் கண்கள் மஞ்சள் நிறம் கொண்டுள்ளது. கழுத்தில் வெள்ளை ஆரம் ஒன்றும் உள்ளது. இருபால்களும் வேறுபாடின்றி தோன்றும்.
வாழ்வியல்
இவை இரவு நேரப்பறவையானாலும் இவற்றைப் பகலிலும் காண இயலும். இவற்றிற்கு தொல்லையளித்தால் தலையை மேலும் கீழுமாக ஆட்டி வெறிக்க வெறிக்க பார்க்கும் தன்மை உடையது.
உணவு
இது சிறு பறவைகளின் அருகே வாழ்ந்தாலும் மற்ற சிறு பறவைகள் இதனை தொந்தரவு செய்வதை கவனிக்கலாம். இவை பலவகையான பூச்சிகள் மற்றும் முதுகெலும்பில்லா பிராணிகளை வேட்டையாடும். பாகிஸ்தான் பிரதேசங்களில் பெரும்பாலும் பூச்சிகளையே உட்கொள்கிறது. ஜொத்புர் போன்ற காய்ந்த பகுதிகளில் அதிகமாக இனவிருத்தி காலத்திற்கு முன் எலி போன்ற கொரிப்பான்களை உட்கொள்கிறது.Jain AP, R Advani (1983). “Winter food of spotted owlet, Athene brama indica”. Journal of the Bombay Natural History Society 80 (2): 415–416. சிறு வௌவால்கள், தவளைகள், தேரைகள், சிறு பாம்புகள் (குருட்டுப்பாம்பு) என பலவற்றையும் உணவாய் உட்கொள்கிறது. சில வேளைகளில் இவை தேள்கள் மற்றும் நத்தைகளையும் உண்ணும். இப்பறவை தன் உணவைத்தேட 270 டிகிரி வரை தலையைச் சுற்றும் தன்மை கொண்டதாகும்.
ஒலியெழுப்புதல்
இவை மிகவும் கரகரப்பான ஒலியை எழுப்புகின்றன. சிர்ர்ர்ர்-சிர்ர்ர்ர்-சிர்ர்ர்ர் என்ற ஒலியின் இறுதியில் சிவாக்-சிவாக் என முடிக்கின்றன. இவற்றின் அகவல்களை பொதுவாக விடியற்காலையிலோ சூரிய அஸ்தமனத்திற்குப்பின்னோ கேட்க முடிகிறது.
இனவிருத்தி
இனவிருத்திக்காலம்
இனவிருத்திக்காலம் பரவலாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை.
காதல் நளினம்
ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று கோதிக்கொண்டும், அலகோடு அலகு சேர்த்தும், உணவை பரிசாக அளித்தும் காதல் கொள்கின்றன. இனவிருத்திக்காலம் முழுதும் ஒரே பொந்தை ஆக்கிரமிக்கின்றன. இனம் சேரத்தயாரான பெண் பறவை தன் துணையை அழைப்பதோடு, தலையாட்டி வாலை திசைத்திருப்பி அழைப்பு விடுக்கும். இவை இணை சேர்வது சரியாக ஆராய்ச்சி செய்யப்படவில்லையாதலால் ஒரு ஆண் பல பெண்களோடு இணையலாமென கருதப்படுகின்றது.
கூடு
கிளி, நாகணவாய் (மைனா) போன்ற பிற மரப்பொந்தை கொண்ட பறவையினங்களோடு புட்டா ஆந்தை போட்டியிடும். செங்குத்தாக பொந்து கொண்ட இடங்களிலும் முட்டைகளை இடும். இலைதழைகள், இறகுகளால் கோடிட்ட மற்றும் தனக்கு முன்பிருந்த பறவையின் கூட்டின் அமைப்பையே உபயோகிக்கும்.
முட்டை
3 முதல் 5 கோள வடிவ வெள்ளை நிற முட்டைகள் மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் இடும். இம்முட்டைகள் 30.9 மி.மீ. நீளமும், 26.3 மி.மீ அகலமும், 11.6கிராம் எடையும் கொண்டிருக்கும்.
குஞ்சுகளைப்பேணுதல்
முதலில் இட்ட முட்டைக்கும் அடுத்த முட்டைக்கும் சில நாட்கள் வரை இடைவேளை இருப்பதால், இவற்றின் குஞ்சுகள் அளவில் ஒத்ததாக இரா. முதலில் குஞ்சுகளின் உணவாக கரப்பான் பூச்சிகளையே தந்தாலும், வளர வளர முதுகெலும்பில்லா பிராணிகள், பல்லிகள், தவளைகள், எலிகள் என உண்ணத் தரும். முதலில் எடை மிகக்கூடும் குஞ்சுகள் பின்னர் எடையை இழக்கின்றன. ஓரிரு குஞ்சுகளே கூட்டை விட்டு 20-28 நாட்களில் வெளியேறும்.
மனிதருடன் பரிமாற்றங்கள்
இரவு நேரப்பறவையானாலும் சில பகல் பொழுதுகளில் மரக்கிளைகளின் மீதமர்ந்து கொண்டு தன்னைச் சுற்றி நடப்பனவற்றை வேடிக்கை பார்க்கும் இயல்புடையவை. யாரேனும் வந்தால் அவர்களைப் பாதுகாப்பான தூரத்திலிருந்தவாறு உற்று நோக்கும். அவர்கள் வெகு அருகாமையில் வந்தால் அவை தள்ளிச்சென்று வேறு கிளைகளில் அமர்ந்து மீண்டும் வேடிக்கை பார்க்கும். திரும்பத்திரும்ப தொல்லை என நினைத்தால் தன் மரப்பொந்திற்கேத் திரும்பி விடும். சிறிது நேரம் கழிந்து மீண்டும் எட்டிப்பார்க்கும். அதன் பார்வையை மரக்கிளையோ அல்லது வேறு பொருளோ மறைத்தால் அழகாய் எட்டிப்பார்க்கும் தன்மை கொண்டுள்ளதால் எளிதில் இதனை புகைப்படம் எடுக்க இயலும்.
நோய்கள்
இப்பறவையினத்தை உண்ணிகளான Coccidian parasites மற்றும் Eimeria atheni என்ற வகைகள் தாக்குகின்றன. வெளிப்புற உண்ணியான Neocheletiella athene ஆன்ட்வெர்ப் (Antwerp) விலங்குகாட்சிசாலையில் உள்ள புட்டா ஆந்தையில் காணப்பெற்றது. பறவை உண்ணியினமான Colpocephalum pectinatum பொதுவாய் உள்ள வெளிப்புற உண்ணிகள்.
கலாசாரத்தில்
மனிதரின் அருகாமையில் வாழும் இவை மிகவும் பரிச்சயமான பறைவகளில் ஒன்றாகும். இவற்றின் அகவல் சிலபல கெட்ட குறிகள் என்றுரைப்போரும் உண்டு. இதன் விலங்கியல் பெயரான “brama” என்பது இந்துக்களின் முப்பெரும்தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவை குறிக்கும். மேலும் இதிகாசங்கள் மற்றும் இந்துப் புராணங்கள்படி இவை விஷ்ணுவின் மனைவியான பல செல்வங்களை அருளும் லட்சுமி தேவியின் வாகனமாகக் கருதப்படுகின்றது.