புல்வெளிக் கழுகு

புல்வெளிக் கழுகு (அகுய்லா நிபலென்சிஸ், ஆங்கிலம்: Aquila nipalensis) என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, ஆங்கிலம்: Accipitridae) சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வலசை போகா மஞ்சட்பழுப்புக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.


விளக்கம்


புல்வெளிக் கழுகு சுமார் 62 – 81 செ. மீ (24 – 32 அங்குலம்) நீளம் மற்றும் 1.65 – 2.15 மீ (5.4 – 7.1 அடி) இறக்கைக் குறுக்களவையும் கொண்டிருக்கும். பெண் பறவைகள் ஆண் பறவைகளைக்காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருக்கும். பெண் பறவைகள் 2.3 – 4.9 கி. கி (5.1 – 10.8 பவுண்டு) எடையும், ஆண் பறவைகள் 2 – 3.5 கி. கி (4.4 – 7.7 பவுண்டு) எடையும் இருக்கும்.


இப்பெரிய கழுகானது பழுப்பு மேற்பகுதிகளையும், கருமையான பறக்க உதவும் இறகுகள் மற்றும் வாலினையும் கொண்டிருக்கும். இது இடம்பெயரா மஞ்சட்பழுப்புக் கழுகினை விட பெரியதும் கருமையானதுமாகும். புல்வெளிக் கழுகு வெளிறிய தொண்டையைக் கொண்டிருக்கும்; இது இடம்பெயரா மஞ்சட்பழுப்புக் கழுகில் கிடையாது. சிறகுகளின் வண்ண வேறுபாடானது இளம் பறவைகளில் வளர்ந்த பறவைகளைவிட குறைவாக இருக்கும். கிழக்குப் பகுதிகளில் காணப்படும் துணை இனமான அகுய்லா நிபலென்சிஸ் நிபலென்சிஸ் (A. n. nipalensis), ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் காணப்படும் துணை இனமான அகுய்லா நிபலென்சிஸ் ஓரியன்டாலிஸ் (A. n. orientalis)ஐ விட அளவில் பெரியதாகவும், கருமையானதாகவும் இருக்கும்.


புல்வெளிக் கழுகின் அழைப்பு (ஒலி) காகம் கரைவதை ஒத்திருக்கும்; ஆயினும் இது ஒரு அமைதியான பறவையாகும்.


உணவு மற்றும் வாழ்விடம்


புல்வெளிக் கழுகுகள் கிழக்கு உருமேனியாவிலிருந்து தெற்கு உருசியா வரையிலான பகுதிகள் மற்றும் மத்திய ஆசியாவின் புல்வெளிகள் முதல் மங்கோலியா வரையிலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வசிக்கும் பறவைகள், அவற்றின் குளிர்காலத்தை ஆப்பிரிக்காவிலும்; கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் பறவைகள், அவற்றின் குளிர்காலத்தை இந்தியாவிலும் கழிக்கின்றன. இப்பறவைகள், மரங்களில் அமைக்கப்பட்ட சுள்ளிகளாலான கூட்டில் ஒன்று முதல் மூன்று முட்டைகளை இடும்; வெப்பமண்டல திறந்தவெளிகளான பாலைவனம், அரைகுறை பாலைவனம், புல்வெளி மற்றும் மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளிகளில் வாழும்.


புல்வெளிக் கழுகுகளின் குடி பெயர்தலின் போது அதிகளவிலான பறவைகள் (மணிக்கு 15.3 பறவைகள் வீதம்) நேபாளத்தின் கரே பகுதியில் காணப்படுகிறாது.


புல்வெளிக் கழுகுகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும். கொறிணிகள், குழிமுயல் அளவிலான பாலூட்டிகள், கௌதாரி அளவிலான பறவைகள் போன்றவற்றையும் கொன்று உண்ணும். மற்ற கொன்றுண்ணிப் பறவைகளிடமிருந்தும் உணவைப் பறித்து உண்ணும். புல்வெளிக் கழுகுகளில் உள்ள கண்டப்பை அது தனது உணவை வயிற்றுக்குச் செலுத்தும் முன் பல மணி நேரம் தொண்டையிலேயே சேமித்து வைக்க உதவுகிறது.


கவக்கூறு


பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சொசைட்டி மற்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகளை மே 2014ல் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டது. அதில், கால்நடைகளில் பயன்படுத்தப்படும் டைக்ளோஃபீனாக்கினால் புல்வெளிக் கழுகுகள் பாதிக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப்பட்டிள்ளது. டைக்ளோஃபீனாக்கினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அருகிவரும் ஜிப்ஸ் பிணந்தின்னிக் கழுகுகளில் காணப்பட்ட நோய் அறிகுறிகள் புல்வெளிக் கழுகுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வுகளில், மிகுந்த உள்ளுறுப்புக் கீல்வாதம், கல்லீரல், சிறுநீரகக் கோளாறு மற்றும் யூரிக் அமில படிவு, திசுக்களில் டைக்ளோஃபீனாக்கின் எச்சப் படிவு போன்ற பாதிப்புகளை புல்வெளிக் கழுகுகளில் கண்டறிந்துள்ளர். இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும் இயல்பினால், புல்வெளிக் கழுகுகள் டைக்ளோஃபீனாக் நச்சினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

புல்வெளிக் கழுகு – விக்கிப்பீடியா

Steppe eagle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.