மஞ்சட்பழுப்புக் கழுகு அல்லது ஆளிக் கழுகு (அகுய்லா ரபக்ஸ், ஆங்கிலம்: Aquila rapax) என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, ஆங்கிலம்: Accipitridae) சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வலசை போகும் புல்வெளிக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.
மஞ்சட்பழுப்புக் கழுகுகள் ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஆரம்பித்து, வெப்பமண்டல தென்மேற்கு ஆசியா முதல் இந்தியா வரை வாழ்கின்றன. இப்பறவைகள் ஒரே இடத்தில் குடியிருந்து இனப்பெருக்கம் செய்யும். மரங்கள், பாறைக் கூர்முகடுகள் மற்றும் நிலத்தில் அமைக்கப்பட்ட சுள்ளிகளாலான கூட்டில் ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். வெப்பமண்டல திறந்தவெளிகளான பாலைவனம், அரைகுறை பாலைவனம், புல்வெளி மற்றும் மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளிகளில் வாழும்.
விளக்கம்
இப்பெரிய கழுகு அகுய்லா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய இனமாகும். இது சுமார் 60 -75 செ. மீ (24 – 30 அங்குலம்) நீளம் மற்றும் 1.59 – 1.90 மீ (5.22 – 6.23 அடி) இறக்கைக் குறுக்களவையும் கொண்டிருக்கும். 1.6 – 3 கி. கி (3.5 – 6.6 பவுண்டு) எடை இருக்கும். இக்கழுகு மஞ்சட்பழுப்பு நிற மேற்புறங்களையும், கருமையான பறக்க உதவும் இறகுகள் மற்றும் வாலினையும், வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். மஞ்சட்பழுப்புக் கழுகு, புல்வெளிக் கழுகினை விட அளவில் சிறியதாகவும் நிறத்தில் வெளிறியதாகவும் இருக்கும்; ஆயினும் புல்வெளிக் கழுகின் வெளிரிய தொண்டைப்பகுதி இவற்றிடம் கிடையாது.
சிறகுகளின் வண்ண வேறுபாடானது இளம் பறவைகளில் வளர்ந்த பறவைகளைவிட குறைவாக இருக்கும்; ஆயினும் இளம் பறவைகளிலேயே சிறகுத்தொகுதியின் வண்ண வேறுபாடுகளைக் காண முடியும்.
தன்மை
மஞ்சட்பழுப்புக் கழுகுகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும். சிறு ஊர்வன, முயல் அளவிலான பாலூட்டிகள், கினிக்கோழி அளவிலான பறவைகள் போன்றவற்றையும் கொன்று உண்ணும். மற்ற கொன்றுண்ணிப் பறவைகளிடமிருந்தும் உணவைப் பறித்து உண்ணும்.
மஞ்சட்பழுப்புக் கழுகின் அழைப்பு (ஒலி) காகம் கரைவதை ஒத்திருக்கும்; ஆயினும் இது ஒரு அமைதியான பறவையாகும்.