உண்மையான ஆந்தைகள் அல்லது வழக்கமான ஆந்தைகள் (குடும்பம் Strigidae) என்பவை இரண்டு பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஆந்தைக் குடும்பங்களில் ஒன்றாகும். மற்றொன்று பார்ன் ஆந்தைகளாகும் (Tytonidae). இந்த பெரிய குடும்பம் சுமார் 25 பேரினங்களில் 189 வாழும் இனங்களைக் கொண்டுள்ளது. இவை அந்தாட்டிக்கா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
உருவியல்
இக்குடும்பத்தில் உள்ள உயிரினங்கள் அளவில் பெரிதும் வேறுபடுகின்றன. இக்குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய ஆந்தையான எல்ஃப் ஆந்தை இக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய ஆந்தைகளான ஐரோவாசியக் கழுகு ஆந்தை மற்றும் பிளாக்கிஸ்டனின் மீன் ஆந்தை ஆகியவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு தான் இருக்கும். ஒவ்வொரு வகையான ஆந்தையும் பெரும்பாலும் ஒத்த உடல் அமைப்பையே பெற்றுள்ளன. இவற்றுக்கு பொதுவாக பெரிய தலைகள், குட்டையான வால்கள் மற்றும் கண்களைச் சுற்றி உருண்டையான முக வட்டங்கள் இருக்கும். வளை ஆந்தை போன்ற ஒரு சில உயிரினங்களை தவிர இக்குடும்பத்தில் உள்ள அனைத்து ஆந்தைகளும் மரத்திலேயே வாழ்கின்றன. இவை பறந்தவாறே தங்களது உணவை வேட்டையாடுகின்றன. இறக்கைகள் பெரியதாகவும், அகலமாகவும் மற்றும் நீளமாகவும் இருக்கும். பெரும்பாலான கொன்றுண்ணி பறவைகளைப் போலவே பெரும்பாலான ஆண் ஆந்தைகள் தங்கள் இன பெண் ஆந்தைகளை விட சிறிய உடல் அமைப்பைக் கொண்டு இருக்கும்.
இவை இரவாடிகளாக இருப்பதால் ஆண் பெண் என இவற்றின் சிறகுகளின் நிறத்தை வைத்து வேறுபடுத்த இயலாதவாறு உள்ளது. இவற்றின் இறக்கைகள் மெல்லியதானதாக உள்ளன. இதன் காரணமாக இவற்றால் சத்தமின்றி பறக்க முடிகிறது. சில ஆந்தைகளில் விரல்களிலும் சிறகுகள் உள்ளன, குறிப்பாக உயர் அட்சரேகைகளில் வாழும் ஆந்தைகளில். பிக்மி ஆந்தை பேரினத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மற்றும் வடக்கு வல்லூறு ஆந்தை ஆகியவை தங்களது தலைக்கு பின்புறம் கண் போன்ற அடையாளங்களை பெற்றுள்ளன. மனிதர்களால் அறியப்பட்டது வரை, பிற பறவைகள் ஆந்தைகளால் எந்நேரமும் கண்காணிக்கப்படுகின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த அடையாளங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. பல்வேறு இரவாடி ஆந்தைகள் காதின் அருகே இறகுகளை பெற்றுள்ளன. கண்களைச் சுற்றி இறகுகளாலான முக வட்டமானது ஆந்தைகளின் காதுகளுக்கு கொடுக்கப்படும் சத்தத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆந்தைகள் துல்லியமாக சத்தத்தை கேட்க கூடியவை. இவற்றின் காதுகள் சமச்சீரற்றவையாக உள்ளன. இதன் காரணமாக ஒரே சத்தத்தை பல்வேறு திசைகளில் இவற்றால் கேட்க முடியும். இவற்றின் கேட்கும் திறன் தவிர ஆந்தைகள் தங்களது உடல் அளவோடு ஒப்பிடுகையில் பெரிய கண்களையும் பெற்றுள்ளன. பொதுவாக ஆந்தைகள் இரவில் நன்றாக பார்க்கக் கூடியவை என்ற கருத்து உண்டு. ஆனால் உண்மையில் அடர்ந்த இருளில் இவற்றால் நன்றாக பார்க்க முடியாது. அதே நேரத்தில் பகல் நேரத்தில் இவற்றால் நன்றாக பார்க்க முடியும்.
நடத்தை
ஆந்தைகள் பொதுவாகவே இரவாடி பறவைகளாகும். ஒரு நாளின் பகல் பொழுது முழுவதும் இவை அடைந்தே இருக்கும். மனிதர்கள் இவற்றை நெருங்கிச் செல்லும் போது கூட இவை அப்படியே அசையாமல் இருக்கின்றன. இதன் காரணமாக ஆந்தைகள் கொல்லைப்படுத்தப்பட்ட உயிரினம் போல அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் அசைவதன் மூலம் தான் இருக்கும் இடத்தை தெரியப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே ஆந்தை, மனிதர்கள் மிக அருகில் செல்லும் போது கூட அப்படியே அசையாமல் இருக்கிறது. மரத்தின் நிறமுடைய சிறகுகள் மற்றும் பார்வை படாத இடங்களில் அடையும் தன்மை ஆகியவை கொன்றுண்ணிகளிடமிருந்தும் சிறிய பறவைகள் ஒன்றுகூடித் துரத்தி விடாமல் இருப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புகள் ஆகும்.
கொன்றுண்ணிகள்
ஆந்தைகளின் முக்கியமான கொன்றுண்ணிகள் மற்ற இன ஆந்தைகளே ஆகும். உதாரணமாக வடக்கு சாவெட் ஆந்தையானது வடக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கிறது. இந்த ஆந்தை தரைமட்டத்தில் செடார் காடுகளின் புதர் பகுதிகளில் வாழ்கிறது. இவை எலிகளை உணவாக உட்கொண்டு, மரங்களில் கண்படும் உயரத்தில் உட்காரக் கூடியவை. இவற்றின் முக்கியமான கொன்றுண்ணிகள் பட்டை ஆந்தைகள் மற்றும் பெரிய கொம்பு ஆந்தைகள் ஆகியவையாகும்.